

வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டொமினிகாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி அசார் அலி (127), பாபர் ஆசம் (55), மிஸ்பா உல் ஹக் (59), சர்பிராஸ் அஹமது (51) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சேஸ் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பின்னர் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது. சேஸ் 69 ரன்னும், ஹோல்டர் 30 ரன்னும் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி சார்பில் மொகமது அப்பாஸ் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 129 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் நேர்த்தியான பந்து வீச்சால் பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 304 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய நான்காவது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 1 விக்கெட் இழப்பிற்கு 7 ரன்கள் எடுத்துள்ளது. பொவேல் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். பிராத்வைட் 3 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்க இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 297 ரன்கள் தேவை. கடைசி நாளில் இவ்வளவு ரன்களை சேஸிங் செய்வது கடினம். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நிலைத்து நின்று விளையாடினால் டிரா செய்ய வாய்ப்புள்ளது.