புளூவேல் விளையாட்டில் மேலும் பல மாணவர்கள் சிக்கி உள்ளனரா?: கல்லூரி-பள்ளிகளில் போலீசார் கண்காணிப்பு

‘புளூவேல்’ விளையாட்டில் மேலும் பல மாணவர்கள் சிக்கி உள்ளனரா என்று கல்லூரி, பள்ளிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
புளூவேல் விளையாட்டில் மேலும் பல மாணவர்கள் சிக்கி உள்ளனரா?: கல்லூரி-பள்ளிகளில் போலீசார் கண்காணிப்பு
Published on

புதுச்சேரி:

அசாம் மாநிலம் ஜமாஜி பகுதியை சேர்ந்தவர் சசிகாந்த் போரா (வயது 23). இவர் புதுவை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

பல்கலைக்கழகத்தில் உள்ள கண்ணதாசன் மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு விடுதி வளாகத்தில் மரத்தில் தூக்கு போட்டு பிணமாக தொங்கினார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் காலாப்பட்டு போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர்.

மாணவர் சசிகாந்த் போரா கடந்த 2 மாதமாக ஆன்-லைன் மூலம் புளூவேல் விளையாட்டில் மூழ்கி இருந்ததும், இந்த விளையாட்டு அவரை தற்கொலைக்கு தூண்டியதும் தெரிய வந்தது.

இதையடுத்து சசிகாந்த் போராவின் செல்போனை பறிமுதல் செய்து சோதனை செய்து பார்த்ததில் இது உறுதியானது.

இந்த நிலையில் புளூவேல் விளையாட்டில் மேலும் சில பல்கலைக்கழக மாணவர்களும் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

இதையடுத்து விடுதிகளில் மாணவர்களை கண்காணிக்க போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அரசு மற்றும் தனியார் விடுதிகளில் தங்கியுள்ள கல்லூரி மாணவர்கள் செல்போன் பயன்பாடுகளை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

இதற்கிடையே நேற்று காலை புதுவையில் உள்ள பிரபல தனியார் பள்ளி மாணவர்களிடம் யார்-யார் புளூவேல் விளையாட்டில் ஈடுபடுகிறார்கள் என்று பள்ளி முதல்வர் விசாரித்த போது 30 மாணவர்கள் விளையாடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் பள்ளி மாணவர்களின் செல்போன் பயன்பாட்டை கண்காணிக்கவும் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் புதுவையில் இயங்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை கல்லூரிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கல்லூரி நிர்வாகத்தினரிடம் மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com