இரட்டை கொலையால் கேரளாவில் வன்முறை - பா.ஜனதா அலுவலகம், போலீஸ் ஜீப்புக்கு தீ வைப்பு

கேரளாவில் நடந்த இரட்டை கொலையை கண்டித்து நடத்தப்பட்ட கண்டன பேரணியில் திடீரென ஏற்பட்ட வன்முறையில் மாகி பா.ஜனதா கட்சி அலுவலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
இரட்டை கொலையால் கேரளாவில் வன்முறை - பா.ஜனதா அலுவலகம், போலீஸ் ஜீப்புக்கு தீ வைப்பு
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் அடிக்கடி அரசியல் மோதல் நடப்பது வாடிக்கையாகி விட்டது.

கண்ணூர் தலச்சேரியை அடுத்த பள்ளூரைச் சேர்ந்தவர் பாபு (வயது 47). மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். புதுச்சேரி அருகில் உள்ள மாகி நகரில் கவுன்சிலராக இருந்தார். நேற்று முன்தினம் இவர், வீட்டிற்கு நடந்து சென்றபோது, 10 பேர் கொண்ட கும்பல் பாபுவை வழிமறித்து தாக்கினர். அரிவாளாலும் வெட்டினர்.

இதில், பாபு உயிரிழந்தார். இவரது கொலை நடந்த சில மணி நேரங்களில் அதே பகுதியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி, பா.ஜனதா கட்சியின் தொண்டருமான சமேஜ் (43) என்பவரும் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆட்டோ டிரைவரான சமேஜை 8 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொன்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜனதா கட்சியின் தொண்டர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இரு கட்சியினரும் நேற்று கண்ணூரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து நேற்று கண்ணூர் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை.

மேலும் இரு கட்சியினரும் மாகியில் தனித்தனியாக கண்டன பேரணி நடத்தினர். மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திய பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. இதில் மாகி பா.ஜனதா கட்சி அலுவலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

வன்முறையில் ஈடுபட்டோரை கலைக்க புதுச்சேரி போலீசார் அங்கு ஜீப்பில் விரைந்து வந்தனர். அந்த ஜீப்பிற்கும் வன்முறை கும்பல் தீ வைத்தது. இதனால் போலீசார் வன்முறையில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.

மாகியில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கியமான சந்திப்புகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். கட்சி அலுவலகங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கண்ணூரில் நடந்த அரசியல் கொலைகளுக்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். போலீஸ் இலாகா செயலிழந்து விட்டதாகவும் எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி 2016 மே மாதம் 19-ந்தேதி பொறுப்பேற்றது. அதன் பிறகு கண்ணூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே அரசியல் காரணங்களுக்காக பழிக்குப் பழியாக கொல்லப்பட்டுள்ளனர்.

இதில், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியும் ஒருவர். கண்ணூர் சம்பவங்களுக்கு காங்கிரஸ் கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com