

சென்னை:
தமிழக பால்வளத் துறை அமைச்சராக உள்ள ராஜேந்திர பாலாஜி கடந்த சில நாட்களாக பரபரப்பான பேட்டிகளை கொடுத்து வருகிறார்.
அந்த வகையில், பா.ஜ.க. என்ன தீண்டத்தகாத கட்சியா, ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு அளிக்க கூடாதா என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மத்தியில் பா.ஜ.க. 10 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாமை பா.ஜ.க, தான் கொண்டு வந்தது” என்றார்.
முன்னதாக வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அதிமுக நிச்சயம் ஆதரவு அளிக்கும் என்று பா.ஜ.க தலைவர் இல.கணேசன் தெரிவித்து இருந்தார். அதேபோல், பா.ஜ.க. தலைவர்களும் இந்த கருத்தினை தெரிவித்து இருந்தனர்.
பா.ஜ.க. தலைவர்களின் கருத்துக்களை உறுதி செய்யும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேட்டி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.