

சிட்னி:
இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் 19-ம் தேதி தொடங்கியது. இன்று நடைபெற்ற 9-வது லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் - அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணிகள் சிட்னி மைதானத்தில் மோதின.
டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அடிலெய்டு அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. அடிலெய்டு அணியில் தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் கேரி 59 பதுகளில் 83 ரன்கள் எடுத்தார். இதுதவிர டிராவிஸ் ஹெட் 29 ரன்களும், ஜொனதன் வெல்ஸ் 33 ரன்களும், கொலின் இங்ராம் 15 ரன்களும் எடுத்தனர். சிட்னி அணி தரப்பில் பென் துவார்சியஸ் 2 விக்கெட்களும், ஜொனதன் போத்தா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்ஸர் அணி களமிறங்கியது. சிட்னி அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணி வெற்றி பெற்றது. சிட்னி அணி தரப்பில் ஜோர்டன் சில்க் 50 ரன்களும், ஸ்டீவ் ஓ கீப் 28 ரன்களும், ஜோகன் போத்தா 25 ரன்களும் எடுத்தனர். அடிலெய்டு அணி தரப்பில் பில்லி ஸ்டான்லேக், மைக்கெல் நிசர், பென் லாப்லின், ரசித் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர்.
அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணியின் அலெக்ஸ் கேரி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது. நாளை நடைபெறும் லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.