

பெர்த்:
இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் டிசம்பர் 19-ம் தேதி தொடங்கியது. இன்று பெர்த் நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்சர்ஸ் - அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அடிலெய்டு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. அடிலெய்டு அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜேக் வெதரால்ட் அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்தார். அலெக்ஸ் கேரி 25 ரன்களும், ஜேக் லீமேன் 21 ரன்களும் எடுத்தனர். பெர்த் அணி பந்துவீச்சில் மேத்தீவ் ஜான்சன், ஜையி ரிச்சர்ட்சன், டிம் பிரஸ்னன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர்.
அதைத்தொடர்ந்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி களமிறங்கியது. பெர்த் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாம் வைட் மேன் 8 ரன்னிலும், மைக்கெல் கிளிங்கர் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் கெமரான் பான்கிராப்ட் களமிறங்கினார். எதிர்முனையில் களமிறங்கிய ஹில்டன் கார்ட்ரை 2 ரன்களிலும், ஆஷ்டன் அகார் டக் அவுட்டும் ஆகினர்.
அதன்பின் பான்கிராப்ட்டுடன், ஆடம் வோஜஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி விக்கெட் கொடுக்காமல் ரன் குவித்தனர். பான்கிராப்ட் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் பெர்த் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆடம் வோஜஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அடிலெய்டு அணி பந்துவீச்சில் ரஷித் கான் 3 விக்கெட்களும், மைக்கெல் நீசர், பில்லி ஸ்டான்லேக், பென் லாப்லின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இன்றைய போட்டியின் முடிவில், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி, தொடர்ந்து 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. அடுத்து 27-ம் தேதி நடைபெறும் லீக் போட்டிகளில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - ஹோபார்ட் ஹரிகேன்ஸ், பிரிஸ்பேன் ஹீட் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #BBL07 #PerthScorchers #AdelaideStrikers