

டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சிட்னி அணி வீரர்கள் எதிரணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். சிட்னி சிக்ஸர் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஜொகன் போத்தா அதிகபட்சமாக 32 ரன்கள் (23 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்தார். இதுதவிர நிக் மேடின்சன் 24 ரன்களும், சாம் பில்லிங்ஸ் 22 ரன்களும் எடுத்தனர். மெல்போர்ன் அணி தரப்பில் வெய்ன் பிராவோ 3 விக்கெட்களும், மொகமது நபி 2 விக்கெட்களும், ஜாக் வில்டர்மத், பிராட் ஹாக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மார்கஸ் ஹாரிஸ், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர். மார்கஸ் ஹாரிஸ் 1 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேமரான் ஒயிட், பிஞ்ச்சுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினார். சிறப்பாக விளையாடிய பிஞ்ச் 51 ரன்கள் (38 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அதன்பின் வெய்ன் பிராவோ களமிறங்கினார். மெல்போர்ன் அணி 15.3 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்தது. கெமரான் ஒயிட் 49 ரன்களுடனும், வெய்ன் பிராவோ 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்றைய போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.