பிக் பாஷ் கிரிக்கெட்: சிட்னி தண்டர் அணியை வீழ்த்தியது அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் தொடரின் லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணி வெற்றி பெற்றது. #BBL07 #AdelaideStrikers #SydneyThunder
பிக் பாஷ் கிரிக்கெட்: சிட்னி தண்டர் அணியை வீழ்த்தியது அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ்
Published on

இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் 19-ம் தேதி தொடங்கியது. இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சிட்னி தண்டர் - அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணியின் அலெக்ஸ் கேரி, ஜேக் வெதரால்ட் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். வெதரால்ட் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் அலெக்ஸ் கேரியுடன் கொலின் இங்கிராம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி ரன் குவித்தது. கேரி 28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத்தொடர்ந்து ஜொனதன் வெல்ஸ், 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய இங்கிராம் 48 ரன்கள் ( 2 பவுண்டரி, 4 சிக்ஸர் ) எடுத்தார். அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. சிட்னி அணியில் பவாத் அகமத் 3 விக்கெட்களும், குரிந்தர் சந்து 2 விக்கெட்களும், கிறிஸ் கிரீன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி தண்டர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கர்டிஸ் பாட்டர்சன் 29 ரன்களும், ஜோஸ் பட்லர் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அவரைத்தொடர்ந்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பென் ரோரர் மட்டும் சற்று நிலைத்து நின்று ஆடி 29 ரன்கள் எடுத்தார்.

சிட்னி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடிலெய்டு அணி பந்துவீச்சில் மைக்கெல் நெசர் 3 விக்கெட்களும், ரஷித் கான், பீட்டர் சிடில் ஆகியோர் தலா 2 விக்கெட்களும், பில்லி ஸ்டான்லேக், பென் லாப்லீன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் 25 ரன்கள் வித்தியாசத்தில் அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணி வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com