பிக் பாஷ் கிரிக்கெட்: பிரிஸ்பேன் ஹீட் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் தொடரின் லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் விழ்த்தி அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணி வெற்றி பெற்றது. #BBL07 #AdelaideStrikers #BrisbaneHeat
பிக் பாஷ் கிரிக்கெட்: பிரிஸ்பேன் ஹீட் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ்
Published on

அடிலெய்டு:

இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் 19-ம் தேதி தொடங்கியது. இன்று நடைபெற்ற 12-வது லீக் போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. 

டாஸ் வென்ற அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அடிலெய்டு அணியினர், சீரான இடைவேளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அந்த அணியில் மைக்கெல் நெசர் அதிகபட்சமாக 40 ரன்கள் (26 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்தார். இதுதவிர கொலின் இங்கிராம் 23 ரன்களும், ஜாக் லீமேன் 22 ரன்களும், ஜேக் வெதர்லண்ட் 20 ரன்களும் எடுத்தனர். அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. பிரிஸ்பேன் அணி தரப்பில் ஜோஷ் லாலர் 3 விக்கெட்களும், யாசிர் ஷா 2 விக்கெட்களும், கேமரான் கேனான், மார்க் ஸ்டெகீட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிஸ்பேன் ஹீட் அணி களமிறங்கியது. எதிர் அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் பிரிஸ்பேன் அணியினர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பிரிஸ்பேன் ஹீட் அணி 16.2 ஓவர்களில் 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேமரான் கேனான் 23 ரன்கள் எடுத்தார். அடிலெய்டு அணியின் பந்துவீச்சில் பென் லாப்லின் 3 விக்கெட்களும், மைக்கெல் நெசர், ரஷித் கான் தலா 2 விக்கெட்களும், டிராவிஸ் ஹெட், பில்லி ஸ்டான்லேக் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இன்றைய போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. 

சிறப்பாக விளையாடி 40 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்கள் வீழ்த்திய அடிலெய்டு அணியின் மைக்கெல் நெசர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் ஆறு புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது. 

நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் சிட்னி தண்டர் - ஹோபார்ட் ஹரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் - சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. 

#tamilnews #BBL07 #BigBashLeague #AdelaideStrikers #BrisbaneHeat

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com