இண்டர் ஸ்டேட் டி20 கிரிக்கெட்: தமிழ்நாடு அணியை வீழ்த்தியது பரோடா

சையத் முஷ்டாக் அலி டி20 டிராபி தொடரில் தமிழ்நாடு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பரோடா அணி வெற்றி பெற்றது. #TNvBDA #MushtaqAliT20
இண்டர் ஸ்டேட் டி20 கிரிக்கெட்: தமிழ்நாடு அணியை வீழ்த்தியது பரோடா
Published on

கொல்கத்தா:

ரஞ்சி டிராபியில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - பரோடா அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி கேப்டன் விஜய் சங்கர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி தமிழ்நாடு அணியின் பரத் ஷங்கர், பாபா அப்ரஜித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பரத் ஷங்கர் 8 ரன்களிலும், பாபா அப்ரஜித் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விஜய் சங்கர் 6 ரன்னிலும், சஞ்சய் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

அதன்பின் வந்த ஜெகதீசன், வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து நிதானமாக விளையாடினார். ஜெகதீசன் 28 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். தமிழ்நாடு 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்தது. அனிருதா ஸ்ரீகாந்த் 32 ரன்களுடன் களத்தில் இருந்தார். பரோடா அணியின் அதித் ஷெத், ரிஷி அரொதே, லுக்மான் மெரிவாலா, சோயிப் தாய், சுவப்னில் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பரோடா அணி களமிறங்கியது. கேதார் தேவ்தர், உர்வில் பட்டேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். உர்வில் பட்டேல் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் இறங்கிய சுவப்னில் சிங், கேதாருடன் இணைந்து சிறப்பாக விளையாடினார்.

சுவப்னில் சிங் 29 ரன்களில் ஆட்டமிழக்க, கேதார் தேவ்தர் அரைசதம் அடித்தார். அவர் 68 ரன்னில் ஆட்டமிழந்தார். பரோடா அணி 17.1 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பரோடா அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

டெல்லி - உத்தரப்பிரதேசம் இடையிலான ஆட்டத்தில் டெல்லி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதேபோல பஞ்சாப் - ராஜஸ்தான் இடையிலான ஆட்டத்தில் பஞ்சாப் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #TNvBDA #MushtaqAliT20

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com