இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல் நாளில் வங்காள தேசம் 374/4, மொமினுல் ஹக் 175 ரன் குவிப்பு

இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்காள தேசம் அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்துள்ளது. #BANvSL #MominulHaque
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்:  முதல் நாளில் வங்காள தேசம் 374/4, மொமினுல் ஹக் 175 ரன் குவிப்பு
Published on

டாக்கா:

வங்காள தேசம் சென்றுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி சிட்டகாங் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில், டாஸ் வென்ற வங்காள தேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி வங்காள தேசம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பாலும், இம்ருல் கயீசும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். அரைசதம் அடித்த இக்பால் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தது. அதைத்தொடர்ந்து மொமினுல் ஹக் களமிறங்கினார். கயீஸ் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் மொமினுல் ஹக் உடன் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன் எடுத்தது. மொமினுல் சதம் அடித்தார். எதிர்முனையில் விளையாடிய ரஹிம் 92 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். மொமினுல் ஹக் - முஷ்பிகுர் ரஹிம் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 236 ரன்கள் சேர்த்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய லிட்டன் தாஸ் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.

வங்காள தேசம் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்துள்ளது. மொமினுல் ஹக் 175 ரன்களுடனும், மஹ்மதுல்லா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி பந்துவீச்சில் சுரங்கா லக்மல் 2 விக்கெட்களும், தில்ருவான் பெரேரா, லக்‌ஷன் சந்தகன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். #BANvSL #MominulHaque

X

Maalai Malar
www.maalaimalar.com