அமைச்சர் தங்கமணி ஊழலையும் மின்வெட்டையும் மூடி மறைக்கிறார்- எ.வ. வேலு எம்.எல்.ஏ. கண்டனம்

அமைச்சர் தங்கமணி ஊழலையும் மின்வெட்டையும் மூடி மறைப்பதாக தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார். #DMK #AVVelu #TNMinister #Thangamani
அமைச்சர் தங்கமணி ஊழலையும் மின்வெட்டையும் மூடி மறைக்கிறார்- எ.வ. வேலு எம்.எல்.ஏ. கண்டனம்
Published on

தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்றைய தினம் “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில்” நடைபெறும் ஊழல்களையும், மின்வெட்டை நோக்கி தமிழகம் நகர்ந்து கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டி வெளியிட்ட அறிக்கைக்கு பதில் சொல்ல நினைத்து, “தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லை” என்றும் “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் ஊழலே நடக்கவில்லை” என்றும் “இலைச் சோற்றுக்குள் இமய மலையை” திணித்து மறைக்க முயன்ற மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

“தமிழ்நாடு மின்வெட்டை நோக்கிச் செல்கிறது” என்று ஒரு ஆங்கில நாளிதழிலேயே செய்தி வெளிவந்துள்ளது. ஆகவே மின்வெட்டு என்பதை மக்கள் குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள் என்பது அக்மார்க் உண்மை.

தரமற்ற நிலக்கரி இறக்குமதி, அதில் உள்ள ஊழல் எல்லாம் தமிழக சட்டமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள சி.ஏ.ஜி. அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

மின் கொள்முதல் ஊழல் பற்றி சென்னை உயர் நீதிமன்றத்திலேயே வழக்கு தொடர்ப்பட்டு அதுவும் மின் வாரியத்தில் பணியாற்றியவரே ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்று வழக்குப் போட்டாரே அதுவும் அமைச்சருக்கு தெரியாதா?

மின் வாரியத்துறை ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டுகளையாவது அமைச்சர் ஞாபகம் வைத்துள்ளாரா அல்லது அதையும் மறந்து விட்டாரா?

ஆகவே தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் ஒரு அமைச்சர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தன் பக்கத்தில் அமர்த்தி வைத்துக் கொண்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து “அரசியல் பேட்டியை” கொடுப்பதும், அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் கூட அமர்ந்து “ஊழலை மறைக்கும்” பேட்டிக்கு துணை போக வைப்பதும் பொறுப்புள்ள ஒரு அமைச்சரின் செயலா என்பதை முதலில் மின்துறை அமைச்சர் யோசிக்க வேண்டும்.

அதை விடுத்து எங்கள் கழகத் தலைவர் கொடுத்த ஆதாரமிக்க அறிக்கை பற்றியும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிர்வாக அலங்கோலம் பற்றியும் “கேலி” செய்யும் விதத்தில் பேட்டியளிப்பது அமைச்சர் இன்னும் பொதுவாழ்வில் தன்னை பண்படுத்திக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

ஊழலிலும், நிர்வாக சீர்கேட்டிலும், கடும் நிதி நெருக்கடியிலும் மூழ்கிக் கிடக்கும் மின் பகிர்மானக்கழகத்தை முடிந்தால் அமைச்சர் தங்கமணி சீரமைக்க நடவடிக்கை எடுக்கட்டும். அதை விடுத்து கற்பனைக் குதிரைகளை பறக்க விட்டு, ஊழல் கறையைப் போக்க முயற்சிப்பது வீண் வேலை என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com