ஏ.டி.எம். பணம் ரூ.10 லட்சம் மோசடி: ஊழியர் மீது புகார்

ஏ.டி.எம். பணம் ரூ.10 லட்சத்தை மோசடி செய்ததாக ஊழியர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஏ.டி.எம். பணம் ரூ.10 லட்சம் மோசடி: ஊழியர் மீது புகார்
Published on

மதுரை

மதுரை திருநகர் திமுருகன் காலனியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் முத்துவீரப்பன் (வயது28). இவர் வங்கி ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.

இவரிடம் சமயநல்லூரைச் சேர்ந்த ராஜபாண்டி (25), கதிர்வேலன் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.இவர்கள் வங்கிகளில் சென்று பணத்தை பெற்று அதனை ஏ.டி.எம்.களில் வைப்பது வழக்கம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஞானஒளிவுபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.2 கோடியே 63 லட்சத்தை பெற்று சிவகாசி, மேலூர், அருப்புக்கோட்டை பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் வைத்து வரும்படி முத்துவீரப்பன் கூறினார்.

அதன்படி பணத்தை பெற்றுச்சென்ற ராஜபாண்டியும், கதிர்வேலனும் ஏ.டி.எம். மையங்களில் அதனை வைத்துள்ளனர். அருப்புக்கோட்டை ஏ.டி.எம். மையத்தில் பணம் வைத்தபோது ரூ.10 லட்சம் குறைவாக இருப்பதாக முத்துவீரப்பனுக்கு ராஜபாண்டி தகவல் கொடுத்தார்.

ஆனால் அவர் மீது முத்துவீரப்பனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து கரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com