உடும்பை கொன்று வீடியோ வெளியிட்ட ஜோதிடர் கைது

உடும்பை கொன்றதோடு அதில் வசிய மை தயாரிப்பது எப்படி என யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்த ஜோதிடரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

மணப்பாறை:

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மணியங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 29). ஜோதிடரான இவர் தனக்கென ஒரு யூ-டியூப் பக்கம் தொடங்கி அதில் ஜோதிடம் தொடர்பான சில தகவல்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எதிரிகளை ஸ்தம்பிக்க வைக்கும் உடும்பு வசிய மை என்ற தலைப்பில் சுமார் 4½ நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் உடும்பு வசிய மை எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை விளக்கமாக தெரிவித்து இருந்தார்.

மேலும் அந்த வீடியோவில் தன்னிடம் ஒருவர் அடங்கி போகவும், எதிரிகளை எப்படி வீழ்த்தலாம், தொழிலில் எப்படி வெற்றிபெறலாம் என்பது உள்பட, எந்த நிலையிலும் தனக்கு முன்னால் உள்ளவர்களை வசியம் செய்து வாழ வசிய மை உதவும் என தெரிவித்துள்ளார்.

அந்த மை எப்படி செய்திட வேண்டும் என்ற செயல்முறை விளக்கத்தில் சொல்லும்போது உடும்பை பிடித்து அதன் உறுப்புக்களை தனித்தனியாக அறுத்து காய வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது என அந்த வீடியோவில் கூறியிருந்தார்.

இந்த சம்பவம் வனத்துறை உயரதிகாரிகளின் கவனத்திற்கு சென்றதை அடுத்து பெரியசாமி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

அதன்பேரில் துவரங்குறிச்சி வனத்துறை அதிகாரிகள் உடும்பை கொன்று வசிய மை தயாரித்ததாக தெரிவித்த பெரியசாமியை அழைத்து வந்து விசாரணை நடத்தி பின்னர் அவரை வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

உடும்பை கொன்றதோடு அதில் வசிய மை தயாரிப்பது எப்படி என யூ-டியூப் இல் பதிவேற்றம் செய்த ஜோதிடர் கைதான சம்பவம் விசித்திரம் நிறைந்ததாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com