எடப்பாடி அணியில் இணைவது குறித்து 2 நாளில் அறிவிப்பேன்: ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. பேட்டி

தொகுதி மக்களின் கருத்தை கேட்டு எடப்பாடி அணியில் இணைவது குறித்து 2 நாளில் முடிவை அறிவிப்பேன் என்று ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. கூறினார்.
எடப்பாடி அணியில் இணைவது குறித்து 2 நாளில் அறிவிப்பேன்: ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. பேட்டி
Published on

கோவை:

கோவை கவுண்டம் பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி ஓ.பி.எஸ். அணியில் இருந்து திடீரென விலகினார். மேலும் அவர் ஓ.பி.எஸ். அணியில் தான் புறக்கணிக்கப்படுவதாகவும், 5 மாதமாகியும் அ.தி.மு.க. வின் இரு அணிகளும் இணையாததால் இந்த முடிவை எடுத்ததாக அறிவித்தார்.

எனவே இன்று திருப்பூரில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவரது அணியில் இணைவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.விடம் முதல்-அமைச்சரை இன்று சந்திப்பீர்களா? என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது, அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்த போது தொகுதி மக்களின் கருத்தை கேட்டு ஓ.பி.எஸ். அணியில் இணைந்தேன். அங்கு நான் புறக்கணிக்கப்பட்டு வந்தேன். மேலும் அரசை தொடர்ந்து எதிர்த்தால் எனது தொகுதி மக்களுக்கு வளர்ச்சி திட்டப்பணிகளை கொண்டு வரமுடியாத சூழல் உருவானது.

எனவே தொகுதி மக்களின் நலனை கருதி நான் ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகினேன். இதுகுறித்து தொகுதி மக்களிடம் கருத்து கேட்டேன். அவர்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்தினர்.

இன்று காலை வாக்கிங் சென்றபோது தொகுதி மக்கள் சிலர் என்னை சந்தித்து நீங்கள் எடுத்த முடிவு சரிதான் என்றனர். தொடர்ந்து இன்றும், நாளையும் தொகுதி முழுவதும் சுற்றுபயணம் செய்து நல்ல முடிவை அறிவிப்பேன்.

மேலும் எடப்பாடி அணியில் சேருவது குறித்து இன்னும் 2 நாளில் முடிவை அறிவிப்பேன். இன்று நான் அவரை சந்திக்க வாய்ப்பில்லை. பொறுத்திருந்து பாருங்கள், நல்ல முடிவு கிடைக்கும். அரசுடன் இணைந்து செயல்பட்டால்தான் தொகுதியில் வளர்ச்சி பணிகள் செய்ய முடியும் என்ற அடிப்படையில் இந்த முடிவை நான் எடுத்துள்ளேன். மேலும் எனது தொகுதிக்கு நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. இதை வரவேற்று முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்தேன். இதனாலும் நான் புறக்கணிக்கப்பட்டு வந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. நேற்று காலை ஓ.பி.எஸ். அணி சார்பில் நடந்த விழாவை புறக்கணித்தவுடன் அவரை தொடர்பு கொண்டு அணி மாறுகிறீர்களா? என்று கேட்டபோது, அதற்கு மறுப்பு தெரிவித்த அவர் மாலையில் ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகினார்.

அதேபோல் இதுவரை முதல்-அமைச்சரை சந்திப்பது குறித்து உறுதியான தகவலை தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனாலும் அவர் இன்று முதல்-அமைச்சரை சந்திப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த எம்.எல்.ஏ. க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், ஓ.கே.சின்னராஜ் ஆகியோர் கூறும்போது, ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.வை நாங்கள் புறக்கணிக்கவில்லை. முறைப்படி அவருக்கு அழைப்பு அனுப்பினோம். ஆனால் அவர் விழாவில் பங்கேற்காமல் திடீரென அணியில் இருந்து விலகி விட்டார் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com