

சான்பிரான்சிஸ்கோ:
ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர் மாநாடு இன்று துவங்குகிறது. உலக தொழில்நுட்ப சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாக பார்க்கப்படும் மாநாட்டில் ஆப்பிளின் புதிய அறிவிப்புகள் இடம்பெற இருக்கிறது. ஐபோன் வெளியீட்டிற்கு முன் நடைபெறும் இவ்விழாவில் புதிய ஐஓஎஸ், டேப்லெட் மற்றும் ஐபேட் சாதனங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் மற்றும் க்ரியாக் ஃபெட்ரகி, எடி கியூ, ஃபில் ஸ்கில்லர் மற்றும் பலர் உரையாற்ற இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் மாநாட்டில் மென்பொருள் சார்ந்த அறிவிப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. எனினும் இந்த ஆண்டு மாநாட்டில் வன்பொருள்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐஓஎஸ் 11:
சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட அறிமுகமாக ஐஓஎஸ் 11 இயங்குதளம் இருக்கிறது. ஆப்பிள் மியூசிக் சேவையை மாற்றியமைத்து வீடியோ சார்ந்த சேவைகளை சேர்த்து, அனிமேஷன் மற்றும் நோட்டிபிகேஷன்களில் சில மாற்றங்களை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபேஸ்டைம் சேவை மேம்படுத்தப்பட்டு புதிய க்ரூப் வீடியோ காலிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
மேக்ஒஎஸ் 10.13, டிவிஒஎஸ் 11 மற்றும் வாட்ச்ஒஎஸ் 4:
ஆப்பிள் சாதனங்களில் அதிகப்படியான முன்னோட்டங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேக்ஒஎஸ் 10.13 பதிப்பிற்கு மேம்படுத்தப்பட்டு புதிய பெயர் வழங்கப்படலாம். இதேபோல் வாட்ச்ஒஎஸ் மற்றும் டிவிஒஎஸ் பதிப்புகளும் முறையே 4 மற்றும் 11 என மேம்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
சிரி ஸ்மார்ட் ஸ்பீக்கர்:
அமேசான் எக்கோ மற்றும் கூகுள் ஹோம் சாதனங்களுக்கு போட்டியாக ஆப்பிள் விரைவில் புதிய சாதனத்தை வெளியிடும் என தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் ஸ்மார்ட் ஸ்பீக்கர் டிஸ்ப்ளே ஸ்கிரீன், சிறப்பான ஆடியோ அனுபவம் மற்றும் சிரி வசதி கொண்டிருக்கும் என்றும் இதுவரை வழங்கப்படாத சில சேவைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிரி ஸ்மார்ட் ஸ்பீக்கர் விலை போட்டியாளர்களை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஐபேட் ப்ரோ மாடல்கள்:
ஆப்பிள் நிறுவனம் இரண்டு ஐபேட் ப்ரே டேப்லெட்களை அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. முதல் மாடல் 10.5 இன்ச் மற்றொன்று 12.9 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் 10.5 இன்ச் மாடல் 9.7 இன்த் ஐபேட் ப்ரோவை விட சிறிதளவு பெரியதாக இருக்கும். புதிய சாதனங்களில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், விர்ச்சுவல் ஹோம் பட்டன் மற்றும் 12.9 இன்ச் மாடலில் மேம்படுத்தப்பட்ட வன்பொருள் அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட மேக்புக்:
சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் மேக்புக் சாதனங்களை மேம்படுத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேக்புக் ப்ரோ லேப்டாப்களில் ஆப்பிள் நிறுவனம் கேபி லேக் பிராசஸர்களை வழங்கலாம் என கூறப்படுகிறது. மேலும் 15 இன்ச் மாடல்களில் புதிதாக 32 ஜிபி ரேம் மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் சர்வதேச டெவலப்பர் மாநாட்டை ஆப்பிள் சாதனங்கள் மற்றும் அந்நிறுவனத்தின் இணையத்தளம் மூலம் நேரலையில் காணும் வசதியை ஆப்பிள் வழங்குகிறது. நேரலை நிகழ்வு இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு துவங்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.