பெரியார் பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ் மோசடி குறித்து சிபிஐ விசாரணை: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ் மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ் மோசடி குறித்து சிபிஐ விசாரணை: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Published on: 

சென்னை:

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 141 ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு பணிக்கும் ரூ.30 லட்சம் முதல் ரூ.55 லட்சம் வரை கையூட்டாக வசூலிக்கப்பட்டு இருக்கிறது. கையூட்டு பெறப்பட்ட பணிக்கு தகுதியான பலர் விண்ணப்பித்து இருந்தாலும் கூட, தகுதியற்ற பலர் தான் போலிச்சான்றிதழ் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பலர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரை பெற்றவர்கள் என்று கூறப்படுகிறது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த போலி சான்றிதழ் ஊழல் குறித்து கடந்த 2012-ம் ஆண்டும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எவரும் தண்டிக்கப்படவில்லை. அதே போன்ற நிலை மீண்டும் ஏற்பட்டு விடக் கூடாது.

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களை பணி நீக்க வேண்டும். இம்மோசடியில் முதல்-அமைச்சருக்கும், தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால் தமிழக காவல்துறை விசாரணை நேர்மையாக நடக்க வாய்ப்பு இல்லை. எனவே போலி சான்றிதழ் மோசடி குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X