காங்கிரசை தொடர்ந்து ஆதரித்தால் தி.மு.க. காணாமல் போய்விடும்- அன்பழகன் சொல்கிறார்

புதுவையில் தி.மு.க. கட்சி காங்கிரசை மீதமுள்ள 3 ஆண்டுகளும் தொடர்ந்து ஆதரித்து வந்தால் காணாமல் போய்விடும் என்று அன்பழகன் பேசியுள்ளார்.
காங்கிரசை தொடர்ந்து ஆதரித்தால் தி.மு.க. காணாமல் போய்விடும்- அன்பழகன் சொல்கிறார்
Published on

புதுச்சேரி:

புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித்தலைவர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் போது முழுமையான பட்ஜெட் போட தெரியாத முதல்-அமைச்சர் ரங்கசாமி என நாராயணசாமி விமர்சித்து வந்தார்.

தற்போது நாராயணசாமி முதல்-அமைச்சராகி 3-வது முறையாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். நாராயணசாமி முழுமையான பட்ஜெட்டை போட முடியாத பலவீனமான முதல்-அமைச்சராக உள்ளார்.

முழுமையான பட்ஜெட் போடமுடியாத தோல்வியை நாராயணசாமி ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு பொய்யான தகவலை கூறக்கூடாது.

நிதிநிலை அறிக்கை தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க தயாரா? என நான் கேட்டுள்ளேன். குறைந்தபட்சம் 20 நாட்கள் சட்டமன்றத்தை கூட்டி வெளிக்கடன் உள்ளிட்டவற்றை முழுமையான விவாதத்திற்கு எடுத்து கொள்ள தயாரா?

வெற்று வீண் விளம்பரத்திற்காக 2 ஆண்டுகளை நாராயணசாமி வீணடித்துள்ளார். பல்வேறு துறைகளில் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடைபெறுகிறது.

கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் சம்பந்தமாக கவர்னர் கிரண்பேடி நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதில் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு செயல்களில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளது.

கல்லூரிக்கே செல்லாத சிலர் மேலாளராக கூட்டுறவுத்துறையில் பணியாற்றி வருகின்றனர். தலைமை செயலாளர் தலைமையின் கீழ் விஜிலென்ஸ் விசாரணைக்கு கவர்னர் உத்திர விட்டதாக தெரிகிறது. இதில் உண்மை வெளியில் வராது.

கூட்டுறவு வங்கியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து கவர்னர் கிரண்பேடி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். காதி போர்டில் சம்பளத்தை மட்டும் வாங்கி கொண்டு அதிகாரிகள் ஊழியர்கள் பணி செய்யாமல் உள்ளனர். கூட்டுறவு வங்கிக்கு சென்று ஆய்வு செய்தது போல் கவர்னர் கிரண்பேடி காதி போர்டு, பாசிக், பி.ஆர்.டி.சி. போன்ற அரசு நிறுவனங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

டி.டி.வி. தினகரன் கட்சி ஆரம்பிப்பதால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ரஜினி, கமல் ஆகியோரும் கட்சி ஆரம்பித்துள்ளனர். அதேபோல தினகரனும் ஒரு கட்சி ஆரம்பிக்க உள்ளார்.

புதுவை மாநிலத்தை பொறுத்தவரை அ.தி.மு.கவுக்கு 26 சதவீத வாக்குகள் உள்ளது. எங்களில் பாதிதான் தி.மு.க. அந்த கட்சி காங்கிரசை மீதமுள்ள 3 ஆண்டுகளும் தொடர்ந்து ஆதரித்து வந்தால் காணாமல் போய்விடும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com