

சென்னை:
தி.மு.க. சார்பில் வருகிற 8-ந்தேதி மத்திய அரசை கண்டித்து ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
பொருளாதார பாதிப்புக்கு காரணமான மத்திய பாரதிய ஜனதா ஆட்சியை கண்டித்து நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சிகளையும் பங்கேற்க செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மறைமலைநகர் பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். ஓட்டலில் நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்துக்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்குகிறார். இதில் காஞ்சீபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், திராவிட இயக்க தமிழர் பேரவை, விவசாயிகள் தொழிலாளர் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சி மாவட்ட செயலாளர்கள் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இவர்களுடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.
ஆர்ப்பாட்டத்தை எந்த இடத்தில் நடத்துவது எவ்வளவு பேரை திரட்டுவது என்பது குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளது.
கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் முன்னின்று கவனித்து வருகிறார்.