

திருவனந்தபுரம்:
வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) இரவு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர்.
விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள நகர மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதுவரை 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து திரும்பி சென்றுள்ளனர்.
இந்த நிலையில், விமான பயணிகள், கேரள விமான விபத்தில் சிக்கிய பயணிகளின் உறவினர்கள் தொடர்பு கொள்வதற்கான உதவி எண்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.
அந்த எண்கள்
0483 2719321
0483 2719318
0483 2719493
ஆகியவை ஆகும். இந்த எண்களை கொண்டு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.