எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்
Published on

அ.தி.மு.க. ஆட்சியிலும் கட்சியிலும் அதிகாரம் செலுத்துவது யார் என்ற போட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் இடையே வலுத்து வருகிறது.

அ.தி.மு.க.வில் உள்ள மொத்த எம்.எல்.ஏ.க்களான 134 பேரில் 113 பேர் எடப்பாடி பழனிசாமியையும் 21 பேர் டி.டி.வி.தினகரனையும் ஆதரிக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலக்கி விட்டு, தங்களுக்கு சாதகமான ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்பதில் டி.டி.வி. தினகரனும் அவரது ஆதரவாளர்களும் தீவிரமாக உள்ளனர். இதற்காகத்தான் 19 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மனு கொடுத்தனர்.

இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டசபையில் மெஜாரிட்டி இல்லை என்ற சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியையும் அமைச்சர்களையும் கட்சி பதவிகளில் இருந்து நீக்கி டி.டி.வி. தினகரன் அதிரடி நடவடிக்கைகள் எடுத்தார். இது எடப்பாடி பழனிசாமி அணியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


இதையடுத்து கடந்த 28-ந் தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டினார். அ.தி.மு.க. நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் தினகரனுக்கு இல்லை என்று அந்த கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ஆனால் அந்த கூட்டத்தில் சுமார் 35 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வரை கலந்து கொள்ளவில்லை. இது எடப்பாடி பழனிசாமிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் மீண்டும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

35 எம்.எல்.ஏ.க்கள் வராததால் எடப்பாடி பழனிசாமிக்கு 78 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவே உள்ளதாக கருதப்பட்டது. இந்த சர்ச்சைக்கு முடிவு கட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.


எடப்பாடி அணியும் ஓ.பி.எஸ். அணியும் இணைந்த பிறகு நடந்த முதல் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இதுவாகும். கூட்டத்தில் இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெறுவது, பொதுக்குழு கூட்டத்தை திறம்பட நடத்துவது, சசிகலா, தினகரனை அ.தி.மு.க.வில் இருந்து விலக்குவது உள்பட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில் அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்திட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

முதல்-அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி தாமாக முன் வந்து விலக வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் அணியினர் வலியுறுத்தி வரும் நிலையில், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இத்தகைய தீர்மானம் கொண்டு வந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவை உறுதிப்படுத்த பொதுக்குழு உறுப்பினர்களை திரட்டுவது பற்றியும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை 12-ந்தேதி அழைத்து வரும் பொறுப்பு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் பகிர்ந்து அளிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. கட்சிப் பணிகளை ஒருங்கிணைத்து நடத்த 11 பேர் கொண்ட குழு உருவாக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த 11 பேர் குழுவில் யார்-யாரை தேர்வு செய்வது என்பது பற்றியும் இன்று நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மதியம் வரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்ததும் அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திலும் அ.தி.மு.க. கட்சிப் பணிகளை தொடர்ந்து நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது பற்றியும் மாவட்ட செயலாளர்களிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் தினகரனை ஆதரிக்கும் 21 எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரி சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தனர். அவர்களில் 15 பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றிருந்தனர்.

அவர்களில் சில எம்.எல்.ஏ.க்கள் அணி தாவி எடப்பாடி நடத்தும் கூட்டத்துக்கு வரக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் யாரும் இன்று அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வரவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com