

அ.தி.மு.க.வில் கடந்த பிப்ரவரி மாதம் பிளவு ஏற்பட்டது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. அம்மா அணி என்றும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புரட்சித் தலைவி அம்மா அணி என்றும் இரண்டாக பிரிந்தனர்.
அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக அக்கட்சியின் தேர்தல் சின்னமான “இரட்டை இலை” சின்னத்தை தலைமை தேர்தல் கமிஷன் முடக்கியது. இதையடுத்து இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி இரு அணிகளும் லட்சக்கணக்கான ஆவணங்களை தேர்தல் கமிஷனிடம் கொடுத்தன. இந்த நிலையில் சசிகலா, தினகரன் ஆகியோரின் நெருக்கடி காரணமாக ஓ.பி.எஸ். அணியை சேர்த்துக் கொண்டு செயல்பட எடப்பாடி பழனிசாமி அணி மூத்த தலைவர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து அ.தி.மு.க. இரு அணிகளுக்கு இடையே ரகசிய பேச்சுவார்த்தை தொடங்கியது. அப்போது ஓ.பி.எஸ். அணி சார்பில், “சசிகலா, தினகரனை அ.தி.மு.க.வில் இருந்து விலக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்” என்று இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தனர். முதலில் இந்த நிபந்தனைகளை ஏற்க தயங்கிய எடப்பாடி பழனிசாமி அணியினர் பிறகு தினகரனின் நெருக்குதல் அதிகரித்ததால், ஓ.பி.எஸ். கோரிக்கைகளுக்கு சம்மதித்தனர்.
அதன்படி கடந்த 10-ந்தேதி டி.டி.வி.தினகரனை நீக்கும் தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகள் 27 பேர் கொண்டு வந்தனர். தினகரனின் அறிவிப்புகள், அ.தி.மு.க. தொண்டர்களை கட்டுப்படுத்தாது என்றும் அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. அதன் பிறகு ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடை காண நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் அதிரடியாக அறிவித்தார்.
இதையடுத்து இரு அணிகளும் மேலும் நெருங்கி வந்தன. இந்த நிலையில் சசிகலாவை விலக்கி வைத்து விட்டு ஆட்சி மற்றும் கட்சியை வழி நடத்துவதில் அதிகாரப்பகிர்வு செய்வதில் இரு தரப்பினருக்கும் இடையே சற்று இழுபறி ஏற்பட்டது. நேற்று அதில் உடன்பாடு ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக தொடர்வது என்று இரு தரப்பினரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். அதுபோல சசிகலாவை நீக்கிய பிறகு கட்சியை வழி நடத்த 15 பேர் கொண்ட வழிகாட்டும் குழு உருவாக்கவும், அந்த குழுவுக்கு ஓ.பன்னீர்செல்வத்தை தலைவராக தேர்வு செய்ய இரு தரப்பினரும் சம்மதித்தனர்.
இவை தவிர மந்திரி சபையை மாற்றம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளிடமும் இத்தகைய ஒருமித்த கருத்து உருவானதும் ஒன்றுபட்ட அ.தி.மு.க. உருவாவது உறுதியானது. இன்று (திங்கட்கிழமை) அமாவாசை தினம் என்பதால் இன்று அணிகள் இணைப்பை நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி இன்று காலை இரு அணி தலைவர்களும் தனித்தனியே ஆலோசனை நடத்தினார்கள். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவரது வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதுபோல ஓ.பன்னீர் செல்வம் வீட்டிலும் ஆலோசனை நடந்தது. அதிலும் அணிகள் இணைப்பு பற்றி மூத்த தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து மதியம் 12 மணிக்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்துக்கு வருவார்கள் என்றும் அங்கு அ.தி.மு.க. இணைப்பு விழா நடைபெறும் என்றும் தகவல் வெளியானது. அதை உறுதிப்படுத்துவது போல இரு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் தலைமை கழகம் முன்பு குவிந்தனர்.
இதனால் அ.தி.மு.க. தலைமை கழகம் கோலாகலமாக மாறியது. அதுபோல மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடமும் மலர்களால் அலங்கரித்து தயார் நிலையில் இருந்தது.
ஆனால் 12 மணிக்கு திட்டமிட்டப்படி எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தலைமை கழகத்துக்கு வரவில்லை. இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சசிகலாவை நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை இன்றே நிறைவேற்ற வேண்டும் என்று கூறி இருந்தனர். அனைவரும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி அணியினர் திடீரென இன்று மதியம் 12 மணிக்கு கடைசி நிமிடத்தில் அதில் தயக்கம் காட்டினார்கள்.
இணைப்பு முயற்சி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் மறுபக்கத்தில் தினகரன் 16 எம்.எல்.ஏ.க்களை தனது வீட்டில் திரட்டி தயாராக வைத்திருந்தனர். சசிகலாவை நீக்கி தீர்மானம் கொண்டு வந்தால் 16 பேரையும் அவர் ராஜினாமா செய்ய வைத்து விடுவார் என்று ஒரு தகவல் பரவியது.
இதன் காரணமாகத்தான் சசிகலாவை விலக்கும் தீர்மானத்தை எடப்பாடி அணியினர் கையில் எடுக்க தயங்கினார்கள். அவர்கள் அதற்கு பதில் மாற்று யோசனை ஒன்றை தெரிவித்தனர்.
அதன்படி அ.தி.மு.க. தற்காலிக பொதுச்செயலாளராக உள்ள சசிகலா சிறையில் இருப்பதால் ஜெயலலிதா காட்டிய வழியில் வழி நடத்தும் குழுவை அமைக்கலாம் என்று எடப்பாடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அ.தி.மு.க. பொதுக்குழுவை சில தினங்கள் கழித்து கூட்டி அதில் புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்யலாம் என்றும் கூறினார்கள்.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இதை ஏற்க மறுத்தனர். சசிகலாவை இன்று விலக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். இந்த தகவலை அவர்கள் இன்று மதியம் 12 மணிக்கு எடப்பாடி அணியினருக்கு தெரிவித்தனர்.
மதியம் 1 மணிக்கு பிறகு 2-வது தடவையாக ஆலோசனை நடத்தப்பட்ட பிறகும் எடப்பாடி அணியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் ஓ.பி.எஸ். போல அவரும் தவிக்க நேரிட்டதாக ஒரு தகவல் தெரிய வந்துள்ளது.
சசிகலாவை நீக்கும் விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்படாததால் இரு அணிகள் இணைப்பில் இன்று மதியம் திடீர் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்த இடையூறை தவிர்க்க இரு அணி தலைவர்களும் மீண்டும் பேசினார்கள். ஆனால் அதில் சுமூக தீர்வு ஏற்படவில்லை.