

சென்னை:
பேரறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்த நாள் விழா நாளை (15-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.
அ.தி.மு.க.வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். சென்னையில் பல்வேறு இடங்களில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.
வட சென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை (வெள்ளி) மாலை 6 மணிக்கு அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், தங்கசாலை மணிக்கூண்டு அருகில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா தலைமை தாங்குகிறார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலை வகிக்கிறார்.
கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும், கழக இலக்கிய அணி செயலாளருமான பா.வளர்மதி, நடிகர் அஜய்ரத்தினம், எம்.பி.க்கள் எஸ்.ஆர். விஜயகுமார், வெங்கடேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.
பிராட்வே எல்.குமார், பி.ஜெயக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
அ.தி.மு.க.வின் இரு அணிகள் இணைப்புக்கு பிறகு முதல் பொதுக்குழு கூட்டம் முடிந்த பின்னர் நடைபெறும் முதல் பொதுக்கூட்டம் இதுவாகும். எனவே கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த வட சென்னை தெற்கு மாவட்ட கழகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
பொதுக்கூட்ட மேடை கோட்டை வடிவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.