சபாநாயகர் நோட்டீஸை எதிர்த்து 2 எம்எல்ஏக்கள் வழக்கு

சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் 2 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். #SC #ADMK #3ADMKMLAs
சபாநாயகர் நோட்டீஸை எதிர்த்து 2 எம்எல்ஏக்கள் வழக்கு
Published on

புதுடெல்லி:

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி அவர்கள் 3 பேர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் தனபாலிடம் அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். அதன் பேரில் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூன்று பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீசு அனுப்பினார்.

ஒரு வாரத்துக்குள் மூன்று எம்.எல்.ஏ.க்களும் தங்களது நிலை பற்றி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபால் கடந்த செவ்வாய்க்கிழமை அனுப்பி உள்ள நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

அந்த நோட்டீசு அனுப்பப்பட்ட சில மணி நேரத்துக்குள் சட்டசபை செயலாளரிடம் தி.மு.க. சார்பில் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், “சபாநாயகருக்கு எதிராக தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாகவும் உடனே அதை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி அமர்வில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டது. தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று திங்கட்கிழமை வழக்கை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளதால் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஊடகங்கள் மூலம் அறிந்ததாக குறிப்பிட்டு அறந்தாங்கி ரத்தின சபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். #SC #ADMK #3ADMKMLAs

X

Maalai Malar
www.maalaimalar.com