

மும்பை :
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தை தற்காலிகமாக கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற மும்பை மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு மாநகராட்சி கடிதம் அனுப்பியது. வான்கடே மைதானத்தை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் முடிவுக்கு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் ஆதரவு தெரிவித்தார். மேலும் இந்த வசதிக்கு மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தையும் ஏன் மாநகராட்சி கையகப்படுத்த கூடாது? அந்த மைதானம் தேவையான வசதிகளை கொண்டுள்ளது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
ஆனால் இதற்கு சிவசேனா இளைஞரணி தலைவரும், மந்திரியுமான ஆதித்ய தாக்கரே எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “சஞ்சய் ஜி விளையாட்டு மைதானத்தில் உள்ள திறந்தவெளி திடல் நாம் பயன்படுத்த முடியாது. ஏனெனில் அவை களிமண் தளத்தை கொண்டுள்ளது. திடதன்மை கொண்ட திறந்தவெளி திடலை பயன்படுத்தலாம். அது ஏற்கனவே செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்து உள்ளார்.