அடிலெய்டு டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா திணறல்; இங்கிலாந்து தக்கவைக்குமா?

அடிலெய்டில் நடைபெற்று வரும் ஆஷஸ் 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. இங்கிலாந்து அதை தக்கவைக்குமா?
Published on

பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்திருந்தது. குக் 11 ரன்னுடனும், வின்ஸ் ரன்ஏதும் எடுக்காமலும் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. குக், வின்ஸ் ஆட்டத்தை தொடங்கினர். ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். வின்ஸ் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த கேப்டன் ஜோ ரூட் 9 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடிய குக் 37 ரன்கள் எடுத்த நிலையில் லயன் பந்தில் ஆட்டம் இழந்தார்.

பின்னர் வந்த மொயீன் அலி 23, மலன் 19, பேர்ஸ்டோவ் 21, கிறிஸ் வோக்ஸ் 36, ஓவர்டன் 41 (அவுட்இல்லை) ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாட இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 227 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், நாதன் லயன் 4 விக்கெட்டும், கம்மின்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இங்கிலாந்து 227 ரன்கள் சுருண்டதால் ஆஸ்திரேலியாவை விட முதல் இன்னிங்சில் 215 ரன்கள் பின்தங்கியிருந்தது. 200 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றாலும் ஆஸ்திரேலியா பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

பான்கிராஃப்ட், வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 4 ரன்கள் எடுத்த நிலையில் பான்கிராஃப்ட் ஆண்டர்சன் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து கவாஜா களம் இறங்கினார். முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த கவாஜா 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். வார்னர் 14 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஸ்மித் 6 ரன்னில் எல்.பி.டபிள்யூ ஆனார்.

ஆஸ்திரேலியா 50 ரன்கள் எடுப்பதற்குள் முக்கியமான நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. இன்றைய 3-வது நாள் ஆட்டம் முடிவடைவதற்கு சிறிது நேரம் மட்டுமே இருந்ததால் 5-வது விக்கெட்டுக்கு ஹேண்ட்ஸ்காம்ப் உடன் நைட் வாட்ச்மேனாக நாதன் லயன் களம் இறங்கினார். இருவரும் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் இன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. ஹேண்ட்ஸ்காம்ப், லயன் தலா மூன்று ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

2-வது இன்னிங்சில் திணறினாலும் முதல் இன்னிங்சில் 215 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் ஆஸ்திரேலியா தற்போது வரை 268 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. கைவசம் 6 விக்கெட்டுக்கள் உள்ளன. நாளைய 4-வது நாள் ஆட்டத்தில் மேலும் 100 ரன்கள் சேர்த்தாலே 370 ரன்கள் முன்னிலைப் பெற்றிவிடும். பகல் - இரவு டெஸ்டான இதில் இவ்வளவு ஸ்கோரை சேஸிங் செய்ய மிகக்கடினம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com