

திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தென்றல் நகரை சேர்ந்தவர் சிவக்குமார் கிளிப்பட்டு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். வேங்கிக்கால் உண்ணாமலை நகரை சேர்ந்தவர் ஸ்ரீபால். போலீஸ்காரரான இவர் தற்போது கியூ பிராஞ்சில் பணியாற்றி வருகிறார்.
இவரது மாமியார் விமலா வெறையூர் வருவாய் ஆய்வாளராக உள்ளார். பணியின் காரணமாக சிவக்குமார் விமலாவின் வீட்டுக்கு சென்றுவந்தார்.
2 பேருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று சிவக்குமார் விமலாவின் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். ஸ்ரீபாலிடம் விமலா இதுபற்றி கூறியுள்ளார்.
இரவு சுமார் 11 மணியளவில் ஸ்ரீபால் அவரது மாமியார் விமலா ஆகியோர் தென்றல் நகரில் உள்ள சிவக்குமார் வீட்டுக்கு சென்று தட்டி கேட்டுள்ளனர்.
அப்போது ஆத்திரமடைந்த ஸ்ரீபால் தான் கொண்டுவந்திருந்த ஆசீட்டை சிவக்குமார் மீது வீசினார். அவர் தடுக்க முயன்றபோது ஸ்ரீபால் மீதும் ஆசிட்பட்டது. இருவரும் படுகாயமடைந்தனர். திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 2 பேரும் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.