அ.தி.மு.க. கொடிக்கம்பம் சாய்ந்ததால் விபத்தில் சிக்கிய பெண்ணின் இடதுகால் அகற்றம்

அ.தி.மு.க. கொடிக்கம்பம் சாய்ந்ததால் லாரி மோதி படுகாயம் அடைந்த கோவையை சேர்ந்த ராஜேஸ்வரியின் இடதுகால் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது.
விபத்தில் சிக்கிய ராஜேஸ்வரி
விபத்தில் சிக்கிய ராஜேஸ்வரி
Published on

கோவை :

கோவைசிங்கா நல்லூர் பகுதியை சேர்ந்த நாகநாதன் என்பவருடைய மகள் ராஜேஸ்வரி(வயது 31). இவர் கோவை சின்னியம் பாளையம் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் கணக்காளராக வேலை செய்து வந்தார். கடந்த 11-ந்தேதி காலை ஸ்கூட்டரில் வேலைக்கு செல்வதற்காக புறப்பட்டார். கோவை பீளமேடு கோல்டு வின்ஸ் பகுதியில் சாலை தடுப்பு பகுதியில் அ.தி.மு.க. கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டு இருந்தன. இதில் ஒரு கொடிக்கம்பம் திடீரென்று சாய்ந்ததாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த ராஜேஸ்வரி தன் மீது கொடிக்கம்பம் விழாமல் தவிர்ப்பதற்காக திடீர் பிரேக் போட்டுள்ளார். இதனால் நிலைத்தடுமாறிய அவர் ஸ்கூட்டருடன் சறுக்கி கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று ராஜேஸ்வரியின் கால்கள் மீது ஏறியது. அவரது இரண்டு கால்களும் லாரி சக்கரத்தில் சிக்கியதால் கால்கள் நசுங்கி படுகாயம் அடைந்தார். பின்னர் அந்த லாரி வலது புறம் ஏறி நின்றது.

ராஜேஸ்வரியின் ஸ்கூட்டர் லாரி சக்கரத்துக்குள் மாட்டிக்கொண்டது. கால்கள் முறிந்து படுகாயம் அடைந்த ராஜேஸ்வரிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடது காலின் மூட்டு பகுதி சிதைந்த நிலையில் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ராஜேஸ்வரியின் இடது கால் அகற்றப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து அந்த மருத்துவமனையின் டாக்டர்கள் கூறியதாவது:-

விபத்தில் சிக்கிய பெண்ணின் 2 கால்களையும் காப்பாற்ற தீவிர சிகிச்சை அளித்து வந்தோம். ஆனால் இடது காலில் தசைகள் சிதைந்து, எலும்புகள் முறிந்து இருந்தது. அந்த பெண்ணின் உயிரை காப்பாற்ற வேண்டிய நிலையில், இடது காலின் தொடை பகுதியில் இருந்து அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, ஆபரேஷன் செய்து இடது கால் அகற்றப்பட்டுள்ளது. செயற்கை கால் பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு டாக்டர்கள் கூறினார்கள்.

தொடர்ந்து மருத்துவமனையில் லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் அவரது குடும்பத்தினர் நிவாரண நிதி உதவியை எதிர் நோக்கியுள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com