முகுந்த், வாஷிங்டன் சுந்தருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்: மேத்யூ ஹைடன் கணிப்பு

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் ஆட உள்ள முகுந்த், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் சென்னை சூப்பர் கிங்சில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக ஹைடன் கூறியுள்ளார்.
முகுந்த், வாஷிங்டன் சுந்தருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்: மேத்யூ ஹைடன் கணிப்பு
Published on

2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20-ந்தேதி வரை சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் 22-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்சை 24-ந்தேதி நெல்லையில் சந்திக்கிறது.

டி.என்.பி.எல். போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தமிழகம் முழுவதும் வலம் வருகிறார். மதுரையில் இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்து ரசிகர்களை மகிழ்வித்த அவர் ஜாலியாக கிரிக்கெட்டும் ஆடினார்.

மேத்யூ ஹைடன் கூறுகையில், ‘நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய போது தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களுக்கு சென்றதில்லை. இப்போது டி.என்.பி.எல். மூலம் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இங்கு உணவுகள் பரிமாறப்படும் விதம் அற்புதம். காரவகை உணவுகளை விரும்பி சாப்பிடுகிறேன்.

தடை முடிந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஐ.பி.எல். போட்டிக்கு திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் எனக்கு மறக்க முடியாத நினைவுகள் உண்டு. 2010-ம் ஆண்டில் ஐ.பி.எல். மற்றும் சாம்பியன்ஸ் லீக் இரண்டிலும் வாகை சூடினோம். அது எங்களுக்கு சிறப்பு வாய்ந்த ஆண்டாக அமைந்தது.

டி.என்.பி.எல். போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்குமா? என்று கேட்கிறீர்கள். நிச்சயமாக. வாஷிங்டன் சுந்தர், அபினவ் முகுந்த், ஜெகதீசன், நடராஜன் போன்ற வீரர்களை சொல்லலாம். இவர்களிடம் நிறைய திறமைகள் அடங்கி இருக்கிறது. இதில் முகுந்த் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர். அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது.’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com