பொறையாறு பணிமனை இடிந்து 8 பேர் பலி: தஞ்சை-நாகையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் மவுன அஞ்சலி நடைபெற்றது.
பொறையாறு பணிமனை இடிந்து 8 பேர் பலி: தஞ்சை-நாகையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

தஞ்சாவூர்:

நாகை மாவட்டம் பொறையாறில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையின் கட்டிடம் இடிந்து விழுந்து போக்குவரத்து ஊழியர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழமையான கட்டிடத்தை சரியான பராமரிப்பு செய்யாமல் இருந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று தொழிற் சங்கத்தினர், ஊழியர்கள் கடும்குற்றம் சாட்டினர். நாகை, சீர்காழி, மயிலாடுதுறை போன்ற இடங்களில் போக்குவரத்து ஊழியர்கள் பஸ்சை நிறுத்தி நேற்று இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை தஞ்சை புறநகரில் உள்ள கரந்தை போக்குவரத்து பணிமனை மற்றும் ஜெபமாலை புரத்தில் உள்ள நகர் கிளை முன்பு அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புறநகர் பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. தலைவர் முருகன் தலைமை தாங்கினார். ஜெபமாலை புரத்தில் உள்ள நகர் கிளையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொழி லாளர்கள் முன்னேற்ற சங்கம் நகர் கிளை நிர்வாகி ஜெயசந்திரன் தலைமை தாங்கினார்.

இதில் ஏ.ஐ.டி.யூ.சி. பொது செயலாளர் துரை.மதிவாணன், கோட்ட செயலாளர் கஸ்தூரி, கிளை நிர்வாகி தாமரை செல்வன், தொ.மு.ச. மத்திய சங்க துணை தலைவர்கள் அன்பரசன், ஜெயவேல் முருகன், அம்பேத்கர் சங்க பொது செயலாளர் இளங்கோவன், சி.ஐ.டி.யூ.சி நிர்வாகிகள் கண்ணன், ராமசாமி, காரல்மார்க்ஸ், ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகி கென்னடி, தமிழக மக்கள் முன்னேற்ற சங்க பொது செயலாளர் ராஜேந்திரன், நிர்வாகி மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பொறையாறில் 8 பேர் பலியான சம்பவத்துக்கு காரணமான தொழிற்சாலை ஆய்வாளரை கண்டித்தும், முறையாக பராமரிப்பு செய்யாத கழக நிர்வாகத்தை கண்டித்தும், விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பலியானவர்களின் குடும்பத்துக்கு அரசு வழங்கிய இழப்பீடு போதாது. அவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். அனைத்து பணிமனையில் உள்ள கழிவறை, குளியலறை, உணவகங்கள், ஓய்வறைகள் போன்ற இடங்களை முறையாக ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும் என்பது உள்ளபட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதே போல் நாகை, மயிலாடுதுறை, சீர்காழி பணிமனையில் பஸ் ஊழியர்கள் மவுன அஞ்சலி நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com