கும்பகோணத்தில் 75 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்

கும்பகோணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 75 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சேதம் அடைந்தது.
கும்பகோணத்தில் 75 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்
Published on: 

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே உள்ள திரும்புரம்பியத்தை சேர்ந்தவர்கள் பாபு, பிரபு. அண்ணன் - தம்பியான இவர்கள் கும்பகோணம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பீமன் தெருவில் பழைய மோட்டார் சைக்கிள்களை வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர்.

கடை அருகே குடோன் உள்ளது. அதில் இரு சக்ர வாகனங்களை நிறுத்தி வைத்து இருந்தனர். நேற்று இரவு 10 மணிக்கு கடை உரிமையாளர் பாபு கடையை பூட்டி விட்டு சென்றார்.

நள்ளிரவு 12 மணியளவில் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென்று பரவ தொடங்கியது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் உடனடியாக கடை உரிமையாளர்களுக்கும், கும்பகோணம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

ஆனாலும் குடோனில் இருந்த 75 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமானது. சேத மதிப்பு ரூ. 15 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தீ விபத்தில் குடோன் அருகே இருந்த மாமரமும் எரிந்தது.

குடோனில் 2 சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. அதனை ஆய்வு செய்த போது இரவு 11.45 மணி வரை தான் அதில் பதிவாகி உள்ளது. அதன் பின்னர் பதிவாக வில்லை.

எனவே சி.சி.டி.வி. கேமிராவை யாராவது நிறுத்தி விட்டு குடோனுக்கு தீ வைத்தார்களா? அல்லது தீ விபத்தில் கேமிரா செயல் இழந்து விட்டதா? என்ற கோணத்தில் கும்பகோணம் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X