

களியக்காவிளை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல், நாகர்கோவில் ஆகிய சப் டிவிசன்களுக்கு கீழ் உள்ள பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் தமிழக-கேரள எல்லை பகுதியான களியக்காவிளையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்தப்படுவதாக தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் களியக்காவிளைக்கு விரைந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் அதே பகுதியை சேர்ந்த அன்வர் என்பவரின் வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். போலீசாரை கண்டதும் அங்கிருந்து 3 பேர் தப்பியோடி விட்டனர்.
சோதனையில், சேமியா பாக்கெட்டுகளுக்கு அடியில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அங்கிருந்த 600 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் புகையிலை பொருட்களை கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக நிறுவன உரிமையாளர் அன்வரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய 3 பேரை தேடி வருகிறார்கள்.