551 மீனவர்கள் மாயமான வழக்கு: சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்

ஒக்கி புயலில் சிக்கி 551 மீனவர்கள் மாயமானது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
551 மீனவர்கள் மாயமான வழக்கு: சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்
Published on: 

மதுரை:

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த ஆண்டோலெனின், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த 29-ந்தேதி இரவிலும், மறுநாள் பகலிலும் வீசிய ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரழிவு ஏற்பட்டது. அந்த சமயத்தில் 200 படகுகளில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை.

ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களுக்கு ஒக்கி புயல் தொடர் பாக எந்த தகவலும் தெரியவில்லை. இதனால் அவர்கள் புயலில் சிக்கிக் கொண்டனர்.

இவர்களை ஹெலிகாப்டரை அனுப்பி மீட்கும் பணியில் மத்திய-மாநில அரசுகள் ஆர்வம் காட்டவில்லை. கடந்த 31-ந் தேதியே கடல் பகுதியில் ஹெலிகாப்டரை அனுப்பி மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தால் ஏராளமான மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டிருப்பார்கள்.

மீனவர் கிராமங்களில் டிசம்பர் 3 முதல் 17 வரை ஆய்வு நடத்தியபோது 551 மீனவர்கள் இதுவரை வீடு திரும்பாதது தெரியவந்தது.

மாயமான மீனவர்களின் நிலை தெரியாமல் அவர்களின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். ஒக்கி புயலில் சிக்கி மாயமான 551 மீனவர்களையும் கண்டுபிடித்து ஆஜர்படுத்த மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ஒக்கி புயலில் மீனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இன்னும் 271 மீனவர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வைத்தியநாதன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவர்கள் மாயமானது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com