திருச்சி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் ஒரே நாளில் 55 பேர் அனுமதி

திருச்சி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் 8 பேர் மட்டும் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலும் 55 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

திருச்சி:

டெல்லியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இஸ்லாமியர்கள் பங்கேற்ற மாநாடு ஒன்று நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்றது.

இதில் பல்வேறு நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் சமீபத்தில் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் டெல்லி சென்று திரும்பிய பலருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி, உரிய சிகிச்சை அளித்து வரும் சுகாதாரத்துறையினர், டெல்லி சென்று திரும்பி பட்டியலில் வராதவர்கள் தாமாகவே முன்வந்து மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டில் 63 பேர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் 55 பேரை நோய் தடுப்பு குழுவினர் கண்டறிந்து அவர்களின் இல்லங்களுக்கே சென்று திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்தம், தொண்டை சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக திருச்சி மாநகரில் இருந்து மட்டும் 21 பேர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் உறையூர், பாலக்கரை, தென்னூர், காஜா நகர், ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். இதேபோல் புறநகரில் இருந்து லால்குடி, மண்ணச்சநல்லூர், மணப்பாறை, முசிறி, துவரங்குறிச்சி பகுதியில் இருந்து டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். மொத்தமுள்ள 63 பேரில் 55 பேர் கண்டறியப்பட்டு ஒரே நாளில் திருச்சி அரசு ஆஸ்பத்திரி கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். மற்ற 8 பேரை நோய் தடுப்பு குழுவினர் தேடி வருகிறார்கள்.

ஏற்கனவே கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருச்சி அரசு ஆஸ்பத்திரி சிறப்பு வார்டில் 50-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு நோய் தொற்று இல்லை என்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தற்போது 8 பேர் மட்டும் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலும் 55 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com