தமிழ்நாட்டுக்கு 525 எலக்ட்ரிக் பஸ்கள் ஒதுக்கீடு

தமிழ்நாட்டுக்கு 525 எலக்ட்ரிக் பஸ்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னை உள்பட 8 நகரங்களில் எலக்ட்ரிக் பஸ்கள் இயக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரிக் பஸ்கள்
எலக்ட்ரிக் பஸ்கள்
Published on

நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் எலக்ட்ரிக் பஸ்களை இயக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

முதற்கட்டமாக இதை போக்குவரத்து துறையில் செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு எலக்ட்ரிக் பஸ் வேண்டும் என்று கேட்கப்பட்டது. அந்தந்த மாநிலங்களில் ‘எலக்ட்ரிக் பஸ்களின்’ சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டு வந்தது.

இதன்படி மாநில அரசுகளிடம் இருந்து 14,988 பஸ்கள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதை பரிசீலித்த மத்திய அரசு 64 நகரங்களுக்கு 5595 எலக்ட்ரிக் பஸ்களை பயன்படுத்த அனுமதித்துள்ளது.

இதில் தமிழகத்துக்கு 525 எலக்ட்ரிக் பஸ்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்துக்கு 725 பஸ்கள், உத்தரபிரதேச மாநிலத்துக்கு 600 பஸ்களும் அனுப்பப்படுகிறது. டெல்லியில் மெட்ரோ ரெயில் நிலையங்களை இணைக்கும் வகையில் 100 பஸ்கள் கொடுக்கப்படுகிறது. இது தவிர பெருநகரங்களில் பஸ்களை இயக்கும் வகையில் 400 பஸ்கள் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், வேலூர், தஞ்சாவூர் ஆகிய 8 நகரங்களில் எலக்ட்ரிக் பஸ்கள் இயக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களுக்கு தலா 100 பஸ்களும், ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர் ஆகிய நகரங்களுக்கு 50 பஸ்களும், தஞ்சாவூருக்கு 25 பஸ்களும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

சென்னைக்கு மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தனியாக எலக்ட்ரிக் பஸ்கள் விடப்படுகிறது.

திருவான்மியூர்- சென்ட்ரல், கோயம்பேடு- பிராட்வே இடையே எலக்ட்ரிக் பஸ்கள் விடப்படுகிறது.

தமிழக போக்குவரத்து துறையில் இதுவரை டீசல் பஸ்கள்தான் இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பேட்டரியில் எலக்ட்ரிக் பஸ்களை இயக்க கடந்த 2 ஆண்டுளாக சென்னையில் சோதனை ஓட்டம் பரீட்சார்த்த முறையில் நடத்தப்பட்டு வந்தது.

மாற்றுத்திறனாளிகள் 3 சக்கர சைக்கிளுடன் பஸ்சில் ஏறுவதற்கும் இதில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

பஸ் இயங்க 26 பேட்டரிகள் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த பேட்டரிகளை 3 மணி நேரம் சார்ஜ் செய்தால் 150 கி.மீ. வரை இயக்கலாம்.

இதுகுறித்து அசோக் லேலண்ட் நிறுவன உயர் அதிகாரி கூறியதாவது:-

சாதாரண பஸ்களின் வடிவமைப்பில் இருந்து எலக்ட்ரிக் பஸ்களின் வடிவமைப்பு சற்று வித்தியாசமாக அமைக்கப்படுகிறது. இருக்கை வசதி சொகுசாக அமைக்கப்படுகிறது. எலக்ட்ரிக் பஸ்சில் புகை, ஒலி மாசு இருக்காது.

பஸ் இயங்கும் தூரத்துக்கு சாதாரண பஸ்களை இயக்கினால் 40 லிட்டர் டீசல் செலவாகும். பேட்டரி ரீசார்ஜ் செய்ய அதில் பாதி செலவுதான் ஏற்படும். பஸ்களின் கூரை மீது சூரிய ஒளி தகடுகளை நிறுவி பேட்டரியை ரீசார்ஜ் செய்யவும் இதில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com