கொரோனாவில் இருந்து மீண்ட பெண், அரசு ஆஸ்பத்திரியில் திடீர் மரணம்- விசாரணை நடத்த டீன் உத்தரவு

டிஸ்சார்ஜ் தேதி அறிவித்த நிலையில், கொரோனாவில் இருந்து மீண்ட பெண் அரசு ஆஸ்பத்திரியில் திடீரென இறந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த டீன் உத்தரவிட்டுள்ளார்.
மரணம்
மரணம்
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் மருதங்கோடு செம்மங்காலை காட்டுவிளை வீட்டை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி சந்திரிகா (வயது 50). இவர் கடந்த 25-ந் தேதி சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அவருக்கு ரத்தம் குறைவாக இருந்ததாக கூறி மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. அப்போது சந்திரிகாவுக்கு தொற்று இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து சிகிச்சைக்காக கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த 3-ந் தேதி நடந்த பரிசோதனையில் சந்திரிகாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்ட அவர் 5-ந் தேதி (அதாவது நேற்று) டிஸ்சார்ஜ் ஆகலாம் என்று டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக நேற்று முன்தினம் மாலை சந்திரிகா இறந்து விட்டார். கொரோனா தொற்று நீங்கி விட்டதாக கூறி டிஸ்சார்ஜ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சந்திரிகா திடீரென இறந்து போனது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் ஆஸ்பத்திரியில் டாக்டர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து சந்திரிகாவின் மகன் அனீஷ் (24) என்பவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் சுகந்தி ராஜகுமாரியை சந்தித்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த என் தாயாருக்கு கொரோனா தொற்று நீங்கியதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் 5-ந் தேதி வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்றும் டாக்டர்கள் கூறினர். ஆனால், 4-ந் தேதி மாலை அவர் திடீரென இறந்துவிட்டார். அன்றைய தினம் மாலை 5 மணி அளவில் என் தாயாருக்கு நர்சு ஒருவர் வந்து ஊசி போட்டார். ஊசி போட்ட சில வினாடிகளில் தாயார் கை, கால்கள் உதறி துடித்துள்ளார். நான் உடனே நர்சை அழைத்தேன். பின்னர் பரிசோதனை செய்து விட்டு என் தாயார் இறந்து விட்டதாக தெரிவித்தார். நர்சு செலுத்திய மருந்தால் தான் என் தாயார் மரணம் அடைந்துள்ளார். தவறான மருந்தை செலுத்தியதால் தான் அவர் இறந்து விட்டார். எனவே சம்பந்தப்பட்ட நர்சு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து டீன் சுகந்தி ராஜகுமாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த 26-ந் தேதி மூச்சு திணறல் காரணமாக சந்திரிகா ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து 4 மாதங்களாக உதிரப்போக்கு இருந்துள்ளது. உதிரப்போக்கினால் ரத்தசோகை மற்றும் இதயம் செயலிழந்த நிலையில் அவருக்கு கொரோனா இருந்ததும் தெரியவந்தது. பின்னர் அவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். 28-ந் தேதி முதல் அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. 3-ந் தேதி அன்று கொரோனா பரிசோதனை செய்தபோது சந்திரிகாவுக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் மறுநாளில் அவருக்கு மீண்டும் ரத்தம் செலுத்தப்பட்டது. மேலும் ரத்தம் ஊறுவதற்கான மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. அதன்பிறகு 4-ந் தேதி மாலை அவர் கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு அவசர சிகிச்சைக்காக வெண்டிலேட்டருக்கு மாற்றப்பட்டார். உயிர் காப்பதற்கான அனைத்து மருந்துகளும் கொடுக்கப்பட்டன. எனினும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இறந்து போனார். ரத்தசோகை, இதயம் செயலிழப்பு, அதிகப்படியான உதிரப்போக்கு, கர்ப்பப்பை கீழிறங்குதல் மற்றும் கொரோனா பின் விளைவு காரணமாக சந்திரிகா இறந்துள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

எனினும் சந்திரிகா இறப்பு தொடர்பாக விசாரணை நடத்த டாக்டர்கள் குழுவிற்கு உத்தரவிட்டுள்ளதாக டீன் சுகந்தி ராஜகுமாரி தெரிவித்தார்.

முன்னதாக இச்சம்பவம் தொடர்பாக ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் அனீஷ் புகார் அளித்தார். அதன்பேரில் சந்திரிகா மர்மமான முறையில் இறந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com