

மும்பை:
மராட்டிய மாநிலத்தில் தற்போது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
காங்கிரஸ் மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது.
இந்த நிலையில் மராட்டிய மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் விரும்புகிறார்கள்.
இதற்காக இப்போதே திட்டமிட்டு பா.ஜ.க. தலைவர்கள் பா.ஜ.க.வை மிக வலுவாக பலப்படுத்த மராட்டியத்தில் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். இதைத் தொடர்ந்து மற்ற கட்சிகளும் தங்களை தேர்தலுக்கு தயார் படுத்த தொடங்கியுள்ளன. இதனால் மராட்டிய அரசியல் நிலவரம் பரபரப்பாகி உள்ளது.
இதற்கிடையே கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையாக மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய தலைவர்களை பா.ஜ.க.வுக்கு இழுக்க ரகசிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் உள்ள முக்கிய எம்.எல்.ஏ.க் களுக்கு பா.ஜ.க. சார்பில் வலை விரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மராட்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 50 பேர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக மராட்டிய மாநில பா.ஜ.க. மூத்த தலைவரும், மந்திரியுமான கிரிஸ் மகாஜன் கூறியுள்ளார். இது மராட்டிய மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியில் மிக வலுவாக ஆட்சியில் அமர்ந்துள்ள பா.ஜ.க. மாநிலங்களிலும் தங்களது வலுவான ஆட்சி நடைபெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. அதன் அடிப்படையில் கோவா, கர்நாடகா மாநிலங்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் கள் ‘வலை’ வீசி பிடிக்கப்பட்டனர்.
அடுத்து மத்தியபிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். இதற்கிடையே மராட்டியத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், அம்மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு குறி வைத்துள்ளனர். இதனால் மராட்டிய மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியின் கூடாரம் கலகலக்க தொடங்கியுள்ளது.