பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல் - ஆசிரியர்கள் 5 பேர் சஸ்பெண்டு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சக்கராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 ஆசிரியர்களை சஸ்பெண்டு செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல் - ஆசிரியர்கள் 5 பேர் சஸ்பெண்டு
Published on: 

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சக்கராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் கணக்கன்குப்பத்தை சேர்ந்த லூர்துசேவியர். தமிழக ஆசிரியர் கூட்டணியின் விழுப்புரம் மாவட்ட செயலாளரான இவர் கடந்த 19-ந் தேதி வழக்கம்போல் பள்ளியில் பணியில் இருந்தார்.

அப்போது மற்றொரு ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சிலர், சக்கராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்குள் புகுந்து அங்கு பணியில் இருந்த லூர்துசேவியரை திடீரென தாக்கிவிட்டு அங்கிருந்து திரும்பிச்சென்று விட்டனர்.

இந்த தாக்குதலில் லூர்துசேவியர் காயமடைந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் 42 ஆசிரியர்கள் மீது செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் ஆசிரியர் லூர்துசேவியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காட்டுசித்தாமூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் அண்ணாத்துரை, கோணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கிளியோபாஸ், பாலப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஷேக்மூசா, சேரானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உமருனிசா, சித்தாம்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் கோபிநாதன் ஆகிய 5 பேரையும் துறை ரீதியாக பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதிவாணன் உத்தரவிட்டார்.

மேலும் மற்ற 37 ஆசிரியர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி செஞ்சி உதவி தொடக்க கல்வி அலுவலருக்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com