பஸ் நிலைய மேற்கூரை இடிந்து 5 பேர் பலி: அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை முற்றுகையிட்ட உறவினர்கள்

சோமனூர் பஸ் நிலைய மேற்கூரை இடிந்து 5 பேர் பலியான சம்பவத்தையடுத்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்கு வந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
பஸ் நிலைய மேற்கூரை இடிந்து 5 பேர் பலி: அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை முற்றுகையிட்ட உறவினர்கள்
Published on: 

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூர் பஸ் நிலையத்தின் மேற்கூரை நேற்று மதியம் இடிந்து விழுந்தது.

இதில் அரசு பஸ் கண்டக்டர் சிவக்குமார்(வயது 43), சோமனூரை சேர்ந்த கல்லூரி மாணவி தாரணி(20), பல்லடம் அய்யம்பாளையத்தை சேர்ந்த ராமலிங்கம் மனைவி ஈஸ்வரி(40), சூலூர் குளத்து பாளையத்தை சேர்ந்த பழனிசாமி மனைவி துளசி(40) மற்றும் 65 வயது முதியவர் ஒருவர் என 5 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.

இடிபாடுகளுக்குள் சிக்கி 9 ஆண்கள், 7 பெண்கள் என மொத்தம் 16 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 7 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியிலும், 3 பேர் சோமனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 6 பேர் இரு தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த பஸ் நிலையம் 1998-ம் ஆண்டு கட்டப்பட்டது. இதை முறையாக பராமரிக்கவில்லை. ஆங்காங்கே காரைகள் பெயர்ந்து கட்டிட சுவர் வெடிப்பு விழுந்த நிலையில் இருந்தது. சில வருடங்களுக்கு முன்பு பழைய கட்டிடத்துடன் இணைத்து முன்புறம் 200 அடி நீளம் உள்ள புதிய கான்கிரீட் மேற்கூரை கட்டப்பட்டது. இது தான் நேற்று இடிந்து விழுந்தது.

கடைகளின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை முறையாக இணைக்கப்படவில்லை. 200 அடி நீளத்துக்கு ஒரு கான்கிரீட் பில்லர் கூட இல்லாமல் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் வெளியேற போதுமான வழி இல்லை. ஒரு வருடத்துக்கு முன்பு தளம் போடப்பட்டு சுவர்களுக்கு டைல்ஸ் ஒட்டப்பட்ட போதும் மேற்கூரையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தநிலையில் தான் கடந்த 1 வாரமாக சோமனூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால் பஸ் நிலைய மேற்கூரையில் மழை நீர் அதிகளவு தேங்கி இருந்தது. இதனால் சிறிது சிறிதாக வலுவிழந்த மேற்கூரை இடிந்து விழுந்து 5 உயிர்களை பலிவாங்கி உள்ளது.

சம்பவ இடத்துக்கு மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் மற்றும் அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். காயமடைந்தவர்களையும், பலியானவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறுவதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று இரவு வந்தார். அப்போது அமைச்சரை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

விபத்தில் பலியானவர்களுக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதி அறிவித்திருக்கிறார். இந்த சம்பவத்திற்கு இது தீர்வாகாது. கட்டிடம் முறையாக பராமரிப்பு இல்லாததே விபத்துக்கு காரணம். இதுகுறித்து முறையாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி அமைச்சரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட் டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் வேலுமணி சிறிதுநேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதற்கிடையே பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் முதல்-அமைச்சர் அறிவித்த ரூ.4 லட்சம் நிவாரண நிதி போதாது, கூடுதல் நிதி வழங்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்றனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறைவான தொகை. இவர்களுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். இந்த விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்ட னர். அவர்களுடன் மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரன், ஆர்.டி.ஓ. மது ராந்தகி மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சமாதானம் அடைந்த உறவினர்கள் தாரணி, துளசி, கண்டக்டர் சிவக்குமார் ஆகியோரின் உடல்களை வாங்கி சென்றனர். ஈஸ்வரியின் உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான முதியவர் யார்? என்பது தெரியவில்லை. அவரை அடையாளம் காண்பதற்காக அவரது படத்துடன் நோட்டீசு அச்சிடத்து கோவை, திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

X