திருச்சி தற்காலிக காய்கறி சந்தையில் 42 கடைகளின் கூரை சரிந்து விழுந்தது

திருச்சி தற்காலிக காய்கறி சந்தையில் ஒரே நேரத்தில் 42 கடைகளின் மேற்கூரைகள் சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வியாபாரிகள், பொதுமக்கள் காயமின்றி உயிர் தப்பினார்கள்.
திருச்சியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சந்தையில் கடைகளின் மேற்கூரை சரிந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
திருச்சியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சந்தையில் கடைகளின் மேற்கூரை சரிந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
Published on

திருச்சி :

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரம் கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி முதல் தடை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து காந்தி மார்க்கெட்டில் நடைபெற்று வந்த மொத்த வியாபாரம் பொன்மலை ஜி கார்னர் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

சில்லறை விற்பனைக்காக திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானம், காஜாமலை அண்ணா விளையாட்டு அரங்கத்தின் முன் பகுதி, ஜோசப் கல்லூரி மைதானம், இ.ஆர்.மேல்நிலைப்பள்ளி வளாகம் உள்ளிட்ட 8 இடங்கள் ஒதுக்கப்பட்டன. தற்போது இந்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தைகளில் வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகிறார்கள்.

திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக காய்கறி சந்தையில் 53 கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. வியாபாரிகள் வியாபாரம் செய்வதற்கு வசதியாக ஒரு வரிசையில் 42 கடைகளும், இன்னொரு வரிசையில் 11 கடைகளும் கம்பு ஊன்றி தகர கொட்டகை அமைத்து கொடுக்கப்பட்டிருந்தது. இவற்றில் வியாபாரிகள் தினமும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வியாபாரம் செய்து வருகிறார்கள்.

நேற்று காலை 11 மணி அளவில் வியாபாரிகள் வழக்கம்போல் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென ஒரு வரிசையில் இருந்த 42 கடைகளின் தகரத்தால் ஆன மேற்கூரைகளும் அப்படியே சரிந்து விழுந்தது.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காய்கறிகள் வாங்குவதற்கு வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அலறியடித்து ஓடினார்கள். தகர கொட்டகை அப்படியே பின்பகுதியில் சரிந்து விழுந்ததால் பொருட்கள் வாங்க வந்த பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் அதிர்ஷ்டவசமாக சிறு காயம் கூட ஏற்படவில்லை. முன் பகுதியில் சரிந்து விழுந்து இருந்தால் தகரம் வெட்டி பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com