

வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி டொமினிகாவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் அசார் அலியின் சதத்தால் 376 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 247 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
129 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பாகிஸ்தான் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து வெஸ்ட் இண்டீசை விட 303 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 304 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் நான்காவது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 7 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது.
பாவெல், ஹெட்மையர் களம் இறங்கினார்கள். 90 ஓவர்கள் தாக்குப்பிடித்தால் டிரா செய்து விடலாம் என்ற நோக்கத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் விளையாடினார்கள்.
பாவெல் 4 ரன்னிலும், ஹெட்மையர் 25 ரன்னிலும், ஹோப் 17 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த சேஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ரன்கள் அடிப்பதை விட அதிக பந்துகளை சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆடினர். அதற்கேற்றபடி போட்டி சென்று கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் 88.2 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி விக்கெட்டுக்கு சேஸ் உடன் வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியல் ஜோடி சேர்ந்தார்.
அப்போது 8.4 ஓவர்கள் மீதமிருந்தது. இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். ஆட்டம் முடிய 1.1 ஓவர்களே மீதமிருந்தது. யாசீர் ஷா வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தனது கடைசி பந்தை வீசினார். அதுவரை தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட கேப்ரியல் ட்ரைவ் செய்ய முயன்றார். அப்போது பந்து பேட்டில் பட்டு க்ளீன் போல்டானது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 202 ரன்கள் ஆல்அவுட் ஆகி 101 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
அந்த ஒரு பந்தை கேப்ரியல் எதிர்கொண்டிருந்தால், அடுத்த ஓவரை சேஸ் திறமையாக எதிர்கொண்டு போட்டியை டிரா செய்திருப்பார். அது முடியாமல் போனது.
இந்த வெற்றியின்மூலம் பாகிஸ்தான் 2-1 எனத் தொடரைக் கைப்பற்றியது. மிஸ்பா உல் ஹக், யூனிஸ்கான் ஆகியோர் அணியின் வெற்றியுடன் தங்களது டெஸ்ட் போட்டி வாழ்க்கையை முடித்துக் கொண்டனர்.