300 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 2018-19 கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கைக்கு தடை - ஏ.ஐ.சி.டி.இ.

மாணவர்கள் சேர்க்கை மிக குறைவாக உள்ள 300 தனியார் பொறியியல் கல்லூரிகள் அடுத்த கல்வியாண்டு முதல் புதிய மாணவர்களை சேர்க்க கூடாது ஏ.ஐ.சி.டி.இ. தெரிவித்துள்ளது.
Published on

கடந்த சில வருடங்களாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. என்ஜினீயரிங் படிப்பு மீதுள்ள மோகம் குறைந்ததால் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டவில்லை.

சிறந்த கட்டமைப்பு வசதிகள் கொண்ட கல்லூரிகளை மட்டும் மாணவர்கள் தேர்வு செய்து வருவதால் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்லூரிகளை புறக்கணித்தனர். இதனால் அந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேராததால் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியியல் இடங்கள் காலியாக கிடந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் சேராமலும் மிக குறைந்த எண்ணிக்கையில் சேர்ந்த மாணவர்களை கொண்டு தொடர்ந்து கல்லூரிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் மாணவர்கள் சேர்க்கை 30 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகள் விரைவில் மூடப்பட வேண்டும். அந்த கல்லூரிகள் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஏ.ஐ.சி.டி.இ. தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 13.56 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவற்றில் 800 கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

மனிதவள மேம்பாட்டுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில், 300 தனியார் கல்லூரிகள் மூடப்பட உள்ளன. அவற்றில் 150 கல்லூரிகளில் 20 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும் 500 கல்லூரிகளின் மாணவர்கள் சேர்க்கை தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com