செங்கல்பட்டில் ஆட்டோ டிரைவரை அடித்து கொன்ற பிளஸ்-2 மாணவர்கள் - இதுதான் காரணம்

செங்கல்பட்டில் ஆட்டோ டிரைவரை பள்ளி மாணவர்கள் அடித்து கொன்ற சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு, அனுமந்த புத்தேரி பகுதியை சேர்ந்தவர் திலீப்குமார் (வயது 35). ஷேர் ஆட்டோ டிரைவர். நேற்று மாலை அவர் பள்ளி சவாரியை முடித்துக்கொண்டு அதே பகுதி பாரதியார் தெருவில் வந்து கொண்டு இருந்தார்.

அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் பள்ளி சீருடை அணிந்த 3 மாணவர்கள் தாறுமாறாக வந்தனர். அவர்கள் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் திடீரென முன்னால் சென்ற திலீப்குமாரின் ஆட்டோவில் மோதியது.

இதனை திலீப்குமார் கண்டித்தார். தாறுமாறாக மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த மாணவர்களுடன் வாக்குவாதம் செய்தார். இதில் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த மாணவர்கள் 3 பேரும் சேர்ந்து திலீப்குமாரை சரமாரியாக தாக்கினர். இதில் நிலை குலைந்த அவர் கீழே சரிந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் திலீப்குமாரையும், மாணவர்களையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

உடலில் பலத்த காயம் அடைந்த திலீப்குமார் சோர்வாக காணப்பட்டார். நெஞ்சுவலியும் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு திலீப்குமார் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதில் ஆட்டோ டிரைவரை அடித்து கொன்றது செங்கல்பட்டு டவுனில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள் என்பது தெரிந்தது.

பள்ளி முடிந்ததும் மாணவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார்சைக்கிளில் ஜாலியாக சுற்றி உள்ளனர். அப்போது திலீப்குமாரின் ஆட்டோவில் மோட்டார்சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்து உள்ளது.

மாணவர்களை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கொலையுண்ட திலீப் குமாருக்கும் பிரியா என்ற மனைவியும், பத்மேஷ் என்ற மகனும், பத்மஜா என்ற மகளும் உள்ளனர்.

ஆட்டோ டிரைவரை பள்ளி மாணவர்கள் அடித்து கொன்ற சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com