

பெங்களூர்:
கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே 12-ந்தேதி நடக்கிறது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது.
மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 218 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதே போல் பா.ஜனதாவும் 224 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை 3 கட்டமாக வெளியிட்டது.
இந்த இரு கட்சிகள் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களில் கோடீஸ்வரர்கள், கிரிமினல்களும் இடம் பெற்றுள்ளனர். என்பது தெரிய வந்துள்ளது. ஜனநாயக மறு சீரமைப்புக்கான கூட்டமைப்பினர் இந்த இரு கட்சிகளின் வேட்பாளர்கள் பற்றி ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டனர்.
அதில் காங்கிரஸ் வெளியிட்டுள்ள 218 வேட்பாளர்களில் 148 பேர் மீண்டும் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 134 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள். பா.ஜனதாவில் 97 வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் 58 வேட்பாளர்களில் 46 பேர் கோடீஸ்சுவரர்கள் ஆவார்கள்.
பணக்கார வேட்பாளர்களில் முதல் 3 இடங்களை காங்கிரஸ் வேட்பாளர்களே பிடித்துள்ளனர். கோவிந்தராஜ் நகரில் போட்டியிடும் பிரியா கிருஷ்ணாவின் சொத்து மதிப்பு ரூ.910 கோடி. காங்கிரசைச் சேர்ந்த இவர் தான் பணக்கார வேட்பாளர்களில் முதல் இடத்தில் உள்ளார்.
இவருக்கு அடுத்த இடத்தில் மற்றொரு காங்கிரஸ் வேட்பாளர் நாகராஜு உள்ளார். ஹொச கோட்டே தொகுதியில் போட்டியிடும் இவரது சொத்து மதிப்பு ரூ.470 கோடி. அவரை தொடர்ந்து பெல்லாரியில் போட்டியிடும் அனில் எச். வாட் என்பவரின் சொத்து மதிப்பு ரூ.288 கோடி ஆகும்.
பா.ஜனதா வேட்பாளர்களில் என்.எஸ். நந்தி ஈஷா ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.118 கோடியாகும். கே.ஆர்.புரத்தில் போட்டியிடும் இவர்தான் அந்த கட்சியில் அதிக சொத்து மதிப்பு கொண்டவர்.
பசவன குடியில் போட்டியிடும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர் கே.பாகே கவுடாதான் அந்த கட்சியின் பணக்கார வேட்பாளர். இவரது சொத்து மதிப்பு ரூ.250 கோடி.
காங்கிரஸ் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.28 கோடி என்றும், பா.ஜனதா வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.8 கோடி என்றும், மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.14 கோடி என்றும் தெரிய வந்துள்ளது.
இதேபோல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 48 பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதில் 23 பேர் மிக கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள்.
பா.ஜனதாவில் 30 வேட்பாளர்கள் மீதும், மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களில் 17 பேர் மீதும், கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதில் 9 பேர் மீது மிக கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. #KarnatakaElections2018