

கன்னியாகுமரி:
கொரோனா என்னும் கொடிய நோயிலிருந்து விடுபடவும், கொரோனா பரவாமல் இருக்க வேண்டியும் கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் ராமநாதபுரம் கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியான நேற்று மாலை பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
கோவிலில் சிறப்பு வழிபாடுகளும், விஷேச பூஜைகளும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்னர் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முககவசம் அணிந்து ஒவ்வொருவராக வரிசையாக சென்று தேங்காய் உடைத்து வழிபட்டனர். ஒரே இடத்தில் மொத்தம் 251 தேங்காய் உடைக்கப்பட்டு இந்த நூதன வழிபாடு நடத்தப்பட்டது.
முன்னதாக காலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீகற்பகவிநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு கொட்டாரம் ஸ்ரீகற்பகவிநாயகர் தேவஸ்தான தலைவர் கே.பி.சுதன் தலைமை தாங்கினார். ஊர்கமிட்டி உறுப்பினர்கள் ஏ.மணி, எஸ்.பத்மநாபன், கே.ரெங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊர் பிரமுகர்கள் வெற்றிவேல்பிள்ளை, அம்பலவாணபிள்ளை, கணேஷ்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.