உள்ளாட்சி தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமா?: முரசொலி பவளவிழாவில் 24 தலைவர்கள் ஒரே மேடையில் பேச்சு

முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் கொட்டிவாக்கத்தில் இன்று நடக்கிறது. இக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட 24 தலைவர்கள் ஒரே மேடையில் அமர்ந்து பேசுகின்றனர்.
உள்ளாட்சி தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமா?: முரசொலி பவளவிழாவில் 24 தலைவர்கள் ஒரே மேடையில் பேச்சு
Published on

சென்னை:

முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் கொட்டிவாக்கத்தில் இன்று நடக்கிறது.

கடந்த மாதம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடந்தபோது மழையால் கூட்டம் இடையில் ரத்து செய்யப்பட்டு மீண்டும் இன்று நடத்தப்படுகிறது.

இந்த முறை மழை குறுக்கிட்டாலும் தடங்கல் ஏற்படாதபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட ஏற்பாடுகள் பற்றி தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

மழை பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாநாட்டு பந்தல் போல் பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டுள்ளது. பந்தலுக்குள் 15 ஆயிரம் பேர் அமர நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்துக்கு வருகை தரும் அனைவருக்கும் ஆப்பிள் ஜூஸ் மற்றும் தண்ணீர் வழங்கப்படும். இவை இரண்டும் ஒவ்வொரு இருக்கையிலும் முன்கூட்டியே வைக்கப்பட்டிருக்கும்.

தலைவர்கள் அமரும் மேடை கோட்டை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பந்தலுக்குள் கலைஞர் எழுதிய நூல்கள், முரசொலி பற்றிய வரலாற்று நிகழ்வுகள் வடிவமைத்து வைக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக 200 அடி நீள எல்.இ.டி. திரை வைக்கப்படுகிறது என்றார்.

கூட்டத்துக்கு பேராசிரியர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார். மா.சுப்பிரமணியன் வரவேற்று பேசுகிறார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுரை ஆற்றுகிறார். ஒரே மேடையில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திராவிடர் கழக தலைவர் வீரமணி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன் உள்பட 24 தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்கிறார்கள்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ம.தி.மு.க.வும், தி.மு.க.வுடன் கைகோர்த்துள்ளது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும், மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பேசுகிறார்.

உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நல கூட்டணி தலைவர்கள், ம.தி.மு.க. ஆகியவை ஒரே மேடையில் தி.மு.க.வுடன் கைகோர்த்து இருப்பது மெகா கூட்டணி உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com