மேற்கு ஆப்பிரிக்காவில் 23 தமிழர்கள் தவிப்பு: வாட்ஸ்-அப்பில் வேலூர் கலெக்டரிடம் புகார்

மேற்கு ஆப்பிரிக்காவில் சாப்பாடு, சம்பளமின்றி தவிக்கும் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த 23 தமிழக தொழிலாளர்கள் வாட்ஸ்-அப் மூலம் வேலூர் கலெக்டரிடம் புகார் மனு அனுப்பியுள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்காவில் தவிக்கும் வாணியம்பாடியை சேர்ந்த 23 தமிழக தொழிலாளர்கள்
மேற்கு ஆப்பிரிக்காவில் தவிக்கும் வாணியம்பாடியை சேர்ந்த 23 தமிழக தொழிலாளர்கள்
Published on: 

வாணியம்பாடி:

மேற்கு ஆப்பிரிக்காவில் சாப்பாடு, சம்பளமின்றி வாணியம்பாடியை பகுதியை சேர்ந்த 23 தமிழக தொழிலாளர்கள் தவிக்கிறார்கள்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த மல்லகுண்டா, வேலமரத்து வட்டம் மற்றும் நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த பெருமாள் சங்கர், சாமிநாதன் உமாபதி, ராஜாமணி பாண்டியன், முருகன் தமிழரசு,

கரியப்பன் அன்பழகன், துரைராஜா, பலராமன் அசோகன், பொன்னுசாமி கோவிந்தராஜ் உள்ளிட்ட 23 தொழிலாளர்கள் டவர் அமைக்கும் பணிக்காக மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள செனகல் நாட்டுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சென்றனர்.

இவர்கள் வாணியம்பாடி மண்டலவாடியை சேர்ந்த ஏஜெண்ட் ரமேஷ் மூலமாக ரூ.25 ஆயிரம் பணம் செலுத்தி சென்றுள்ளனர். இந்த பணிக்கு ஒரு மாதம் மட்டும் 9,500 ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சம்பளம் கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் சம்பளம் மற்றும் உணவு தராமல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன் தங்களை மீட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய வெளியுறவுத் துறையின் தூதரக அலுவலக அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காததால், வேலூர் மாவட்ட கலெக்டர் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து வாட்ஸ் அப் உள்ளிட்ட மின்னஞ்சல் மூலம் அவர்கள் மனு அனுப்பியுள்ளனர்.

மேலும் அரசுத் துறைச் செயலாளருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 23 தமிழர்களையும் மீட்க இந்திய தூதரகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தமிழக தொழிலாளர்கள், மேற்கு ஆப்பிரிக்கா, மலேசியா போன்ற பல்வேறு நாடுகளுக்கு ஏஜெண்டுகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சம்பளம் கிடைக்காமல் உணவு சாப்பிடாமல் தவியாய் தவித்தனர்.

பிணை கைதிகளாகவே பன்னாட்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டனர். அதன்பிறகு, பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு மாதாமாதம், 50 பேர் என நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். தற்போதும், அதேப்போல் 23 தமிழர்கள், மேற்கு ஆப்பிரிக்காவில் பிணை கைதிகளாக சிக்கி தவிப்பது, உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com