

ராமேசுவரம்:
ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் 500 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர்.
இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள நெடுந்தீவு அருகே மீன் பிடித்தனர். நாகை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர்களும் அந்த பகுதிக்கு வந்த மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சிறிய ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் வந்தனர். அவர்கள் தமிழக மீனவர்களிடம் இப்பகுதி சர்வதேச கடல் பகுதி. இங்கு மீன்பிடிக்கக் கூடாது என எச்சரித்தனர்.
மேலும் மீனவர்களின் படகுகளில் இலங்கை கடற்படையினர் ஏறி அவர்களை தாக்கியதோடு, படகுகளில் பிடித்து வைத்திருந்த மீன்களையும் அபகரித்தனர். மேலும் மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர்.
இதனால் பீதியடைந்த மீனவர்கள் கரை திரும்ப முயன்றனர். அப்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த 4 மீனவர்களை ஒரு படகுடனும், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 9 மீனவர்களை 2 படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
மீனவர்கள் தலைமன்னார் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று பிற்பகலில் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
இதுகுறித்து கரை திரும்பிய மீனவர்கள் கூறுகையில், இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த எங்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி தொடர்ந்து இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பதும், தாக்கி விரட்டியடிப்பதும் நடந்து வருகிறது. இதற்கு எப்போது தான்விடிவு ஏற்படும் என்று தெரியவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.