நெடுந்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் விசைப்படகுகளுடன் சிறைபிடிப்பு

நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரை 3 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
நெடுந்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் விசைப்படகுகளுடன் சிறைபிடிப்பு
Published on: 

ராமேசுவரம்:

ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 262 விசைப்படகுகளில் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர்.

இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது 4 சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை அங்கிருந்து செல்லுமாறு விரட்டினர்.

மேலும் இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளில் ஏறி சராமரியாக தாக்கினர். மீன்பிடி வலைகளை அறுத்து எரிந்து சேதப்படுத்தியதோடு பிடித்து வைத்திருந்த மீன்களையும் கடலுக்குள் வீசினர். இதனால் மீனவர்கள் உயிருக்கு பயந்து அவசர அவசரமாக திரும்ப முயன்றனர்.

அப்போது எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 3 விசைப்படகுகளையும், அதில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் ராஜா, களஞ்சியராஜ், சோலைராஜ், காமராஜ், பாண்டி, ஆரோக்கிய அந்தோணி சந்தியா, தாசன், செல்லையா, ராமு, கார்மேகம், பலவேசம், முனியாண்டி ஆகிய 12 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

அவர்கள் இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்கள் சிறை பிடிப்பு சம்பவம் ராமேசுவரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில் இலங்கை கடற்படையின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது.

ஒவ்வொரு முறையும் மீன்பிடிக்க உயிரை பணயம் வைத்துதான் செல்கிறோம். மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய மாநில அரசுகள் தீர்வு காண்பார்களா? என்பது கேள்விக்குறியாவே உள்ளது என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com