சத்தீஸ்கரின் முதல் பெண் கமாண்டோ படையில் இணைந்த முன்னாள் மாவோயிஸ்டுகள்

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் பெண் கமாண்டோ படைப்பிரிவில், முன்னாள் பெண் மாவோயிஸ்டுகள் 10 பேர் இடம்பெற்று, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான வேட்டையில் களமிறங்கி உள்ளனர். #Chhattisgarh #WomenCommandoUnit #SurrenderedMaoists
சத்தீஸ்கரின் முதல் பெண் கமாண்டோ படையில் இணைந்த முன்னாள் மாவோயிஸ்டுகள்
Published on

சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறை தாக்குதல்கள் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவோயிஸ்டுகள் பதுங்கியிருக்கும் வனப்பகுதிகளில், உள்ளூர் போலீசாருடன் சிறப்பு அதிரடிப்படை மற்றும் மாவட்ட ரிசர்வ் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஏராளமான மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதேசமயம் பயங்கரவாதப் பாதையில் இருந்து திரும்பி திருந்தி வாழ விரும்பும் மாவோயிஸ்டுகளுக்கு, புனர்வாழ்வு பணிகளுக்கான ஏற்பாடுகளையும் அரசு செய்து கொடுக்கிறது. மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்தால் அவர்கள் திருந்தி வாழ வாய்ப்பு வழங்கப்படும் என்று காவல்துறை தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அதனை ஏற்று ஏராளமான மாவோயிஸ்டுகள் குடும்பத்தினருடன் சரண் அடைந்தவண்ணம் உள்ளனர். அவர்கள் திருந்தி வாழ அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான வேட்டையில் ஈடுபடும் தண்டேவாடா மாவட்ட ரிசர்வ் படையில், 30 பேர் கொண்ட பெண் கமாண்டோ பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதுதான் மாநிலத்தின் முதல் பெண் கமாண்டோ பிரிவாகும். சரண் அடைந்த பெண் மாவோயிஸ்டுகள் 10 பேர், இந்த கமாண்டோ படைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அபிஷேக் பல்லவா கூறுகையில், “மாவட்ட ரிசர்வ் படைக்கு உள்ளூர் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். சரண் அடைந்த மாவோயிஸ்டுகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள 30 பேர் பெண் கமாண்டோ படையில், சரண் அடைந்த 10 மாவோயிஸ்டுகள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், மாவோயிஸ்டுக்கு எதிரான கிளர்ச்சி இயக்கத்தில் இருந்த 10 பெண்கள் உதவி கான்ஸ்டபிள்களாக இணைந்துள்ளனர். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இன்றைய நடவடிக்கையிலும் பெண் கமாண்டோ படை இடம்பெற்றிருந்தது” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com